பிஃபா உலகக் கிண்ண வெற்றி வாய்ப்புக் கொண்ட பிரேசில் அணி ஸ்விட்சர்லாந்துடனான தனது முதல் போட்டியில் வெற்றி பெற தவறியுள்ளது. சுவிஸ் அணி பிரேசிலின் அபார கோலுக்கு பதில் கோல் புகுத்தி 1-1 என போட்டியை சமநிலை செய்தது.
ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில் அணி 1978 இற்கு பின்னர் தனது ஆரம்ப போட்டியில் வெற்றியை பெறத் தவறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
நைஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜன்டீனாவை முந்திய குரோஷியா
இளம் நைஜீரிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் குரோஷிய அணி 2-0 என்ற….
ரஷ்யாவின் ரொஸ்டொவ் அரங்கில் அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற இந்த போட்டியில் நெய்மாரின் பிரேசில் அணி ஆரம்பத்தில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கு போட்டியின் 20 ஆவது நிமிடத்திலேயே பலன் கிடைத்தது பெனால்டி எல்லைக்கு அப்பால் வலது மூலையில் இருந்து பந்தை பெற்ற பிலிப்பே கொடின்ஹோ (PHILIPPE COUTINHO) பந்தை வேகமாக உதைக்க அது எதரணி கோல் காப்பளரையும் மீறி வலைக்குள் புகுந்தது.
எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து 5 நிமிடங்களில் ஷெர்டன் ஷகிரி அடித்த கோணர் கிக் உதையை பிரேசில் அணி கோல் கம்பத்திற்கு மிக அருகில் இருந்து ஸ்டிபன் சுபெர் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
இந்நிலையில் பிரேசில் அணி நெய்மாருடன், கப்ரியெல் ஜேசுஸ், வில்லியன் என தனது துருப்புச் சீட்டுகள் அனைத்தையும் களமிறங்கியபோதும் அந்த அணியால் கடைசி வரை வெற்றி கோல் ஒன்றை புகுத்த முடியால் போனது.
குறிப்பாக பிரேசில் அணி வீரர்கள் கோலை நோக்கி உதைத்த (ஐந்து) சந்தர்ப்பங்களில் சுவிஸ் கோல்காப்பாளர் யான் சொம்மர் அவைகளை சிறப்பாக தடுத்தார். போட்டி முடியும் தருவாயில் ரொபார்டோ பிர்மினோ தலையால் முட்டிய பந்தை அவர் பாய்ந்து தடுத்தார்.
இதன் மூலம் கடந்த ஒன்பது உலகக் கிண்ண தொடர்களில் பிரேசில் அணி தனது ஆரம்ப போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றுவந்த வெற்றி முடிவுக்கு வந்தது.
இதன்படி E குழுவில் விளையாடும் பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் தலா ஒரு புள்ளியுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்ததோடு கொஸ்டாரிக்காவை வீழ்த்திய செர்பிய அணி 3 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
மெக்சிகோவிடம் நடப்பு சம்பியன் ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி
இம்முறை உலகக் கிண்ணத்தில் மெக்சிகொ அணி நடப்புச் சம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி முதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முதல் பாதி ஆட்டத்தில் ஹெர்வின் லெசானோ (Hirving LOZANO) மூலம் கோல் புகுத்திய மெக்சிகோ அணி இரண்டாவது பாதியில் உறுதியான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2018 உலகக் கிண்ணம்: ஆர்ஜன்டீன அணியின் முன்னோட்டம்
தற்போது பிஃபா உலக தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் ஆர்ஜன்டீனா 17 ஆவது தடவையாக…
உலகக் கிண்ண போட்டியின் F பிரிவில் முதல் ஆட்டமாகவே ஞாயிற்றுக்கிழமை (17) நான்கு முறை உலக சம்பியனான ஜெர்மனி, மெக்சிகோவை எதிர்கொண்டது. எனினும் போட்டி ஆரம்பித்தபோது ஆட்டத்தில் வேகம் காட்டிய மெக்சிகோவை ஜெர்மனியால் தடுக்க முடியாமல்போனது.
35 ஆவது நிமிடத்தில் சிசாரிடோ பரிமாற்றிய பந்தை பெனால்டி எல்லையில் இடது மூலையில் இருந்து பெற்ற லெசானோ, தடுக்க வந்த ஜெர்மனி பின்கள வீரரையும் முறியடித்து அபாரா கோல் ஒன்றை புகுத்தினார்.
எனினும் இதற்கு ஜெர்மனி அணி விரைவிலேயே பதில் கோல் புகுத்த முயன்றபோதும் டோனி க்ரூஸ் உதைத்த ப்ரீ கிக்கை மெக்சிகோ கோல் காப்பாளர் கில்லர்டோ ஒசோவா வெளியே தட்டிவிட்டார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி பல தடவைகள் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமித்தபோதும் மெக்சிகோ தனது ஒரு கோலையும் பாதுகாத்து சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஜெர்மனி அணி 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாகவே தனது உலகக் கிண்ண ஆரம்ப போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. 36 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஜெர்மனிய அணி அல்ஜீரியாவிடம் தனது ஆரம்ப போட்டியில் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் மெக்சிகொ கடைசி ஆறு உலகக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி F குழுவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததோடு ஜெர்மனி அடுத்து வரும் ஸ்வீடன் மற்றும் தென் கொரிய அணிகளுடனான போட்டிகளில் வென்று தனது குழுவில் முதலிடத்தை பிடிக்க எதிர்பார்த்துள்ளது. F குழுவில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணி 16 அணிகள் சுற்றில் (Round of 16) E குழுவில் முதலிடத்தை பிடிக்கும் அணியுடனேயே மோத வேண்டி இருக்கும். அது பெரும்பாலும் பிரேசிலாக இருக்க வாய்ப்பு உள்ளது.
எனினும் தொடர்ச்சியாக மூன்றாவது உலகக் கிண்ண தொடரில் நடப்புச் சம்பியன் தனது ஆரம்ப போட்டியில் வெற்றி பெற தவறியுள்ளது. 2010 நடப்பு சம்பியனான இருந்த இத்தாலி பரகுவேயுடனான ஆரம்ப போட்டியை 1-1 என சமநிலை செய்ததோடு 2014 இல் நடப்பு சம்பியனாக வந்த ஸ்பெயின் தனது ஆரம்ப போட்டியில் நெதர்லாந்திடம் 5-1 என அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
கொலரொவ்வின் அபார ப்ரீ கிக் மூலம் செர்பியா ஆரம்ப போட்டியில் வெற்றி
அலக்சாண்டர் கொலரொவ்வின் (Aleksandar KOLAROV) அபார ப்ரீ கிக் கோல் மூலம் கொஸ்டாரிக்கா அணியுடனான தனது உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஷ்யாவின் சமரா அரங்கில் E குழுவின் முதல் போட்டியாக இன்று (17) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்டன. எனினும் கொஸ்டாரிக்கா அணியின் டேவிட் குஸ்மா செய்த தவறை அடுத்து அவர் மஞ்சள் அட்டை பெற்றதோடு செர்பிய அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.
செர்பிய அணித்தலைவர் கொலரொவ் மேல் வலது மூலையில் இருந்து 56 ஆவது நிமிடத்தில் பந்தை உதைக்க அது கொஸ்டாரிக்க அணியின் தடுப்பு அரணையும் தாண்டி அந்த அணியின் கோல் காப்பளருக்கும் பிடிக்க முடியாமல் வலைக்குள் புகுந்தது.
போட்டியின் ஆரம்பத்தில் கொஸ்டாரிக்கா பின்கள வீரர் தலையால் முட்டி செர்பிய கோல் கம்பத்தை ஆக்கிரமித்தது மாத்திரமே அந்த அணி இந்த போட்டியில் எதிரணிக்கு சவால் கொடுத்த ஒரே நிகழ்வாக இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் செர்பிய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அந்த அணி தனது கோல் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் பல வாய்ப்புகளையும் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் வெற்றிநடை போடத் தயாராகும் பயிற்றுவிப்பாளர்கள்
2018 உலகக் கிண்ண கால்பந்தில் ஜொலிக்கவுள்ள பயிற்றுவிப்பாளர்கள் கால்பந்து போட்டிகளை…
உலகக் கிண்ணத்தில் வலுவான குழுவாக இருக்கும் E குழுவில் இந்த இரு அணிகளும் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயாமக இருந்தது.
ஐரோப்பாவின் பின்தங்கிய தரவரிசையை கொண்டிருக்கும் செர்பியா இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
மறுபுறம் 2014 உலகக் கிண்ண போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய கொஸ்டாரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக கொலரொவ் இந்த போட்டியில் பெற்ற ப்ரீ கிக் கோலானது இம்முறை உலகக் கிண்ண போட்டியில் பெறும் மூன்றாவது கோலாகும். முன்னதாக ரஷ்யாவின் அலக்சான்ட்ர் கொலொவ் மற்றும் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ப்ரீ கிக் கோல்களை பெற்றனர். இது கடந்த 2014 பிரேசில் உலகக் கிண்ண போட்டியில் ஒட்டுமொத்த ப்ரீ கிக் கோல்களின் எண்ணிக்கைக்கு சமனாகும்.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க