செர்டான் ஷகிரி 90 ஆவது நிமிடத்தில் தனித்துப் பெற்ற அபார கோல் மூலம் செர்பியாவை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ணத்தின் கடைசி 16 அணிகளுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.
பிரேசிலுடனான தனது முதல் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை செய்த சுவிட்சர்லாந்து அணி E குழுவில் 4 புள்ளிகளை பெற்று பிரேசிலுக்கு அடுத்து (4 புள்ளிகள்) இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (27) நடைபெறும் கொஸ்டாரிக்காவுடனான தனது கடைசி குழுநிலை போட்டியை சுவிட்சர்லாந்து சமநிலை செய்தாலும் அது அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட முடியும்.
ஹரி கேனின் கடைசி நிமிட கோல் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி
மறுபுறம் செர்பியா தனது கடைசி ஆரம்ப சுற்றுப்போட்டியில் பலம்கொண்ட பிரேசிலை எதிர்கொள்ள விருப்பதோடு அந்த போட்டியில் வெற்றி பெற்றாலே செர்பியாவால் எந்த நிபந்தனையும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனினும் கலின்கிரேட்டில் ரஷ்ய நேரப்படி வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் செர்பிய அணி ஆரம்பத்தில் ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இரண்டாவது முறையும் ஆரம்பத்தில் மந்தமாக ஆடிய சுவிட்சர்லாந்தின் தற்காப்பு முயற்சி பலன் அளிக்கவில்லை. 5 ஆவது நிமிடத்திலேயே செர்பிய வீரர் அலக்சான்டர் மிட்ரோவிக் தலையால் முட்டி கோல் புகுத்தினார்.
முதல் பாதி: சுவிட்சர்லாந்து 0 – 1 செர்பியா
இராண்டாவது பாதி ஆட்டத்தில் உற்சாகம் பெற்ற சுவிட்சர்லாந்து அணி சார்பில் க்ரானிட் க்சாகா (Granit XHAKA) மூலம் பதில் கோல் புகுத்தியது. 52 ஆவது நிமிடத்தில் வைத்து பெனால்டி எல்லைக்கு வெளியே மேல் வலது மூலையில் இருந்து தனது இடது காலால் உதைத்து க்சாகா அந்த அபார கோலை பெற்றார்.
இந்நிலையில் போட்டி சமநிலையை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும்போது 90 ஆவது நிமிடத்தில் வைத்து சுவிட்சர்லாந்து வீரர் செர்டான் ஷகிரி (Xherdan SHAQIRI) மைதானத்தின் பாதித் தூரத்தில் இருந்து தனியே பந்தை எடுத்துச் சென்று செர்பிய பின்கள வீரர்கள் மற்றும் கோல்காப்பாளர் விளாடிமிர் ஸ்டொஜ்கோவிக்கையும் தாண்டி பந்தை வலைக்குள் செலுத்தினார்.
முழு நேரம்: சுவிட்சர்லாந்து 2 – 1 செர்பியா
கோல் பெற்றவர்கள்
சுவிட்சர்லாந்து – க்ரானிட் க்சாகா 52′, செர்டான் ஷகிரி 90′
செர்பியா – அலக்சான்டர் மிட்ரோவிக் 5′
ஐஸ்லாந்தை வீழ்த்தி ஆர்ஜன்டீனாவுக்கு நம்பிக்கை கொடுத்த நைஜீரியா
அஹமது மூசாவின் இரட்டை கோல் மூலம் ஐஸ்லாந்துடனான உலகக் கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற நைஜீரிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டதோடு இந்த வெற்றியுடன் D குழுவில் ஆர்ஜன்டீன அணியின் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
ஆரம்ப போட்டியில் குரோஷியாவிடம் தோல்வியை சந்தித்த நைஜீரியா ரஷ்ய நேரப்படி வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஆட்டத்தின் ஆரம்பத்திலும் மந்தமாகவே ஆடியது. மறுபுறம் முதல் முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருக்கும் மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்து முதல் பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அப்போது ஐஸ்லாந்து கோலை நோக்கி ஆறு உதைகளை உதைத்த போதும் நைஜீரியாவால் ஒரு தடவை கூட எதிரணி கோலை ஆக்கிரமிக்க முடியாமல் போனது.
கொஸ்டாவின் அதிஷ்ட கோல் மூலம் ஈரானை வென்ற ஸ்பெயின்
எனினும் முதல் பாதி ஆட்டத்தில் பொறுமையுடன் பந்தை பரிமாற்றி நேர்த்தியாக ஆடிய நைஜீரியா இரண்டாவது பாதியில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் பாதி: நைஜீரியா 0 – 0 ஐஸ்லாந்து
49 ஆவது நிமிடத்தில் விக்டர் மோசஸ் பந்தை கடத்தி வந்து பெனால்டி எல்லைக்குள் அஹமது மூசாவிடம் பரிமாற்றினார். பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மூசா அதனை வலைக்குள் செலுத்தி நைஜீரிய அணியை முன்னிலை பெறச் செய்தார்.
பின்னர் 75 ஆவது நிமிடத்தில் மீண்டும் செயற்பட்ட மூசா, ஐஸ்லாந்து பின்கள வீரர் மற்றும் கோல்காப்பாளரை முறியடித்து அபார கோல் ஒன்றை புகுத்தினார்.
எட்டு நிமிடங்கள் கழித்து ஐஸ்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் அதனை கில்பி சிகர்ட்சன் கோல் கம்பத்திற்கு வெளியால் செல்லும் வகையில் உதைத்து வாய்ப்பை நழுவவிட்டார்.
இந்த போட்டி முடிவுடன் D குழுவில் 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கும் குரோசியா 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியதோடு இந்த குழுவில் இரண்டாவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய மூன்று அணிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. எனினும் குரோசியாவுடனான போட்டியில் தோல்வியுற்ற ஆர்ஜன்டீனா உறுதியான நிலையை எட்டியுள்ளது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) நடைபெறவுள்ள போட்டியில் ஆர்ஜன்டீன அணி நைஜீரியாவை வீழ்த்தினால் அது அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும். அதேநேரத்தில் அன்றைய தினம் நடைபெறும் குரேசியாவுடனான போட்டியில் ஐஸ்லாந்து வெற்றிபெறும் பட்சத்தில் கோல் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும். எனினும் ஐஸ்லாந்து தோற்றால் ஆர்ஜன்டீனவால் இலகுவாக முன்னேறிவிட முடியும்.
ஆர்ஜன்டீனாவை வீழ்த்தினால் நைஜீரியாவால் எந்த நிபந்தனையும் இன்றி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.
முழு நேரம்: நைஜீரியா 2 – 0 ஐஸ்லாந்து
கோல் பெற்றவர்கள்
நைஜீரியா – அஹமது மூசா 49′, 75′
கடைசி நிமிடத்தில் கோல்கள் பெற்று உலகக் கிண்ண கனவை தக்கவைத்த பிரேசில்
கொஸ்டாரிக்காவுக்கு எதிரான போட்டி முடியும் தருவாயில் இரு கோல்களைப் போட்ட பிரேசில் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆரம்ப சுற்றுடன் வெளியேறும் நெருக்கடியை தவிர்த்துக் கொண்டது.
ஸ்விட்சர்லாந்துடனான தனது ஆரம்ப போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட பிரேசில் E குழுவுக்காக இன்று (22) நடைபெற்ற தனது இரண்டாவது ஆட்டத்தின் 90 நிமிடங்களில் எந்த ஒரு கோலையும் போடாமலும் விட்டுக் கொடுக்காமலும் போராடிய நிலையில் கடைசி 7 நிமிடங்களில் பிலிப் கொடின்ஹோ மற்றும் நெய்மார் மூலம் இரண்டு கோல்களை புகுத்தி 2-0 என வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரேசில் அணி தனது குழுவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியதோடு அடுத்த சுற்றுக்கு தகுதிபெற எதிர்வரும் புதன்கிழமை (27) நடைபெறும் செர்பியாவுடனான போட்டியை சமநிலையில் முடித்தாலும் போதுமானது. மறுபுறம் தனது இரண்டு போட்டிகளிலும் தோற்றிருக்கும் கொஸ்டாரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குரோசியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் பிரேசில் அணி அரம்பம் தொட்டு ஆதிக்கம் செலுத்தியபோதும் முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணியால் கோல் எதனையும் பெற முடியாமல்போனது.
ரியெல் மெட்ரிட்டைச் சேர்ந்த கொஸ்டாரிக்கா கோல்காப்பாளர் கெய்லோர் நாவாஸ் மற்றும் அந்த அணியின் தற்காப்பு ஆட்டம் உறுதியாக இருந்தது.
முதல் பாதி: பிரேசில் 0 – 0 கொஸ்டாரிக்கா
போட்டியின் 78 ஆவது நிமிடத்தில் பிரேசிலுக்கு கோல் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் தொலைக்காட்சி உதவி நடுவர் முறை மூலம் பிரேசிலுக்கு வழங்கிய பெனால்டியை நடுவர் ப்ஜோர் கைபர்ஸ் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் நெய்மார் வீழ்த்தப்பட்டதாகவே கருதப்பட்டபோதும் அவர் அங்கு சாதாரணமாக விழுவது வீடியோ ஆதாரத்தில் கண்டறியப்பட்டது.
நெய்மார் இந்த உலகக் கிண்ண போட்டியில் வேறு எந்த வீரரை விடவும் 14 தடவைகள் கீழே விழுந்துள்ளார்.
போட்டியின் 90 நிமிடங்கள் பூர்த்தியானபோது பிரேசில் அணி கோலின்றி களைப்படைந்திருந்தது.
எனினும் மார்செலோ பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி எதிரணி கோல்கம்பத்திற்கு அருகில் செலுத்த அங்கிருந்த காப்ரியல் ஜேசூஸ் அழகாக பந்தை தட்டிவிட்டபோது கோடின்ஹோ அவசரமாக அதனை வலைக்குள் செலுத்தினார். இதன் மூலம் பிரேசில் அணி 91 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கொஸ்டாரிக்கா அணி பதில் கோல் போட அவசரம் காட்டியபோது அந்த அணியின் தற்காப்பு அரண் முறிந்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட நெய்மார் 97 ஆவது நிமிடத்தில் இலகுவான கோல் ஒன்றை புகுத்தினார்.
இதன் மூலம் நெய்மார் பிரேசில் அணிக்காக தனது 56 ஆவது கோலை பெற்று அந்த அணிக்கு அதிக கோல் பெற்றவர் வரிசையில், 1994 ஆம் ஆண்டு நட்சத்திர வீரரான ரொமாரியோவை (55) முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
26 வயதுடைய நெய்மாரை விடவும் பிரேசில் ஜாம்பவான்களான பீலே (77), ரொனால்டோ (62) இருவருமே அதிக கோல்களை பெற்றுள்ளனர்.
முழு நேரம்: பிரேசில் 2 – 0 கொஸ்டாரிக்கா
கோல் பெற்றவர்கள்
பிரேசில் – பிலிப் கொடின்ஹோ 90’+1, நெய்மார் 90’+7
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க