ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண போட்டிகளில் B குழு நிலை போட்டிகளில் முன்னிலை பெற்ற இலங்கை அணி, குழு A இல் இரண்டாம் இடம் பெற்ற ஹொங்கொங் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட்டது. இப்போட்டியில் இலங்கை அணி 2-0 கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
முதல் பாதி
ஹொங்கொங் கிங்ஸ் பார்க் மைதானத்தில் மழை காரணமாக சில மணித்தியாலங்கள் தாமதமாக ஆரம்பித்த இந்த அரையிறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் முழு பலத்துடன் மோதிக்கொண்டன. போட்டி ஆரம்பித்து நான்காவது நிமிடத்தில் தமித் பண்டார இலங்கை அணிக்காக முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.
எனினும், மறுமுனையில் மும்முரமாக விளையாடிய ஹொங்கொங் அணியின் முன்னணி வீரர்கள் பல தடவைகள் கோல் போட முயற்சித்த போதிலும், தாக்குதல்கள் முயற்சிகளை திறமையாக தடுத்து கோல்களைப் போட விடாமல் இலங்கை அணியின் பின்னணி தடுப்பு வீரர்கள் விளையாடினர்.
இதன் போது கடுமையாக விளையாடிய தர்மரத்ன ஹரிந்திரவுக்கு போட்டியின் 22வது நிமிடம் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இரு அணிகளிம் சம பலத்துடன் மோதிக் கொண்டதால் அதன் பின்னர் எவ்விதமான கோல்களையும் மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்படி முதல் பாதி நேரத்தில் 1-0 கோல் அடிப்படையில் இலங்கை அணி முன்னிலை பெற்ற நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவுற்றது.
இரண்டாம் பாதி
இடைவேளைக்குப் பின்னர் போட்டி ஆரம்பித்தது முதல் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி கடந்த சிங்கப்பூர் அணியுடனான போட்டியினைப் போல் சமநிலைபடுத்த விடாமல் ஹொங்கொங் அணியை தடுத்தாடினர்.
எனினும், போட்டியின் 66வது நிமிடம் ஹொங்கொங் அணியின் கவனம் முழுதும் கோல் போடுவதில் இருக்க, பிரியலங்க சந்தருவன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதன் மூலம் இரண்டாம் பாதி முடிவில் இலங்கை அணி 2-0 கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அதேநேரம் குழு A இல், முதல் இடம் பெற்ற பங்களாதேஷ் அணி, குழு B இல் இரண்டாம் இடம் பெற்றுக்கொண்ட சிங்கப்பூர் அணியுடன் மோதிய அரையிறுதி போட்டியில், பங்களாதேஷ் ஹொக்கி அணி 8-0 என்ற கோல் அடிப்படையில் இலகுவாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஹொங்கொங் நேரப்படி இன்று மாலை 07:00 மணிக்கு நடைபெறவுள்ளது.