நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்கு மற்றும் மத்திய பிராந்திய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரிஇ சிவனேஸ்வரன் தர்மிகா ஆகியோர் கோல்கள் போட்டு தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களில் கெளரி 14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணியின் உதவித் தலைவியாவார்.
கத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதல் இறுதிவரை திறமையை வெளிப்படுத்திய 14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி போட்டி ஆரம்பித்த 4ஆவது நிமிடத்தில் கௌரி போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.
இந்த கோலினால் உற்சாகமடைந்த இலங்கை பெண்கள் அணியினர் டிலினிக்கா லோச்சனி (15 நி.)இ மெத்மினி ஏக்கநாயக்க (23 நி.)இ தனூஷி விஜேசிங்க (32 நி.)இ அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோர் இடைவேளைக்கு மேலும் 4 கோல்களைப் போட்டனர்.
இடைவேளையின் பின்னர் மாலைதீவுகள் அணியினர் தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதால் இலங்கையினால் கோல் போடுவது சிரமமாக அமைந்தது.
எனினும் போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்த போது மகாஜனாவின் மற்றொரு வீராங்கனையான சிவனேஸ்வரன் தர்மிகா 6ஆவது கோலைப் போட்டார்.