அணி தெரிவு குறித்து விமர்சித்ததன் மூலம் ஒழுக்காற்று விதிகளை பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க மீறியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் செயற்பாட்டுக் குழுத் தலைவர் நய்மர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு எச்சரிக்கை கடிதம் ஏதும் வழங்கப்பட்டதா எனக் கேட்கப்பட்டபோதுஇ உள்ளக விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடத் தயாரில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸாமுதின் சௌதரி பதிலளித்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் வெளியேற்றப்பட்ட சில தினங்களில் சந்திக்க ஹத்துருசிங்க தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் தனக்கு வழங்கப்பட்ட குழாம் சிறந்ததல்ல எனவும் அணி தெரிவு தன்னை மகிழ்விக்கவில்லை எனவும் அதனால் அணியின் கூட்டுறவு பாதிக்கப்பட்டது எனவும் கூறியிருந்தார்.
பங்களாதேஷ் குழாம் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டவுடன் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன் சுழல்பந்துவீச்சாளர் ஜுபைர் ஹொசெய்ன் குழாமில் சேர்க்கப்படாதமைக்கு தனது கடுமையான விமர்சனத்தையும் வெளியிட்டிருந்தார்.
தெரிவாளர்கள் அவர்களது தொழிலை செய்ய அனுமதிக்கப்படவேண்டும் எனவும் தனிப்பட்ட வீரர் ஒருவருக்கு சார்பாக செயற்படுவதானது அணி வீரர்கள் மத்தியில் உளரீதியான தாக்கங்களைத் தோற்றுவிக்கும் எனவும் பங்களாதேஷின் முதலாவது கிரிக்கெட் அணித் தலைவரும் அந் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பணிப்பாளருமான நய்முர் றஹ்மான் சுட்டிக்காட்டினார்.
‘‘அது அவரது (ஹத்துருசிங்க) தனிப்பட்ட கருத்தாகும்.
அது அவரது முதிர்ச்சியின்மையை எடுத்துக்காட்டுகின்றது.
எந்தவொரு பயிற்றுநரும் இப்படி பேசக்கூடாது.
எந்தவொரு பயிற்றுநரும் இவ்வாறு பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடக்கூடாது.
அது ஆரோக்கியமான விடயமல்ல.
எவருக்கு எதிராகவும் அவருக்கு பேச அதிகாரம் இல்லை.
அவரது கருத்துக்கள் ஒழுக்காற்று விதிகளை மீறுவதாக அமைந்துள்ளது.
தெரிவுக் குழு அணியைத் தெரிவு செய்யும்போது அந்தத் தெரிவை கிரிக்கெட் செயற்பாட்டுக் குழுத் தலைவர் சிபாரி செய்வார்.
அதன் பின்னர் அதனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் அங்கீகரிப்பார்.
எனவே தெரிவுகள் சார்ந்த விமர்சனங்கள் கிரிக்கெட் சபைக்கும் சபைத் தலைவருக்கும் எதிராக அமைந்துவிடுகின்றன’’ என நய்முர் தெரிவித்தார்