பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கான றகர் போட்டித் தொடரில் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கும் இடையில் இடம் பெற்றது.
இப் போட்டியில் 13-12 என்ற புள்ளி அடிப்படையில் கொழும்பு பீட்டர்ஸ் கல்லூரி வெற்றி பெற்றது.
கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற இப் போட்டியில் முதல் பகுதியில் இறுதி நேரம் வரை இரு அணிகளும் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் கடைசி நிமிடத்தில் புனித பீட்டர்ஸ் கல்லூரிக்குக் கிடைத்த பெனல்டி ஒன்றை சந்தூஸ் பெரேரா இலகுவாக அடித்து 3 புள்ளியைப் பெற்றுகொடுத்தார் இதன் மூலம் 3-0 என்ற அடிப்படையில் முதற்பாதி முடிவடைந்தது.
இரண்டாம் அரைப் பகுதியில் ஆரம்பத்திலேயே கிங்ஸ்வூட் கல்லூரியின் பாரிஸ் அலி திறமையாகச் சென்று ட்ரை ஒன்றை வைக்க அதனை ரபாய்தீன் கோலாக மாற்றியதால் 7 புள்ளிகளைப் பெற்று 7-3 என்ற நிலையில் நீண்ட நேரம் கிங்ஸ்வூட் கல்லூரி முன்னிலை வகித்தது.
இருந்த போதும் போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும் போது புனித பீட்டர்ஸ் கல்லூரியின் நிரோசன் பெரேரா ட்ரை ஒன்றை வைக்க அதற்கான மேலதிகப் புள்ளியை சந்தூஸ் பெரேரா பெற்றுக் கொடுக்க 10-7 என்ற அடிப்படையில் சென்ட் பீட்டாஸ் கல்லூரி முன்னிலை வகித்தது.
அதனையடுத்து கிங்ஸ்வூட் கல்லூரியின் கசுன் விமலவீர ட்ரை ஒன்றைப் பெற 12-10 என்ற நிலையில் கிங்ஸ்வூட் முன்னிலைக்கு வந்தது.
போட்டி முடிய சில வினாடிகள் இருக்கையில் பீட்டர்ஸ் கல்லூரிக்கு கிடைத்த பெனல்டியை சந்தூஸ் பெரேரா இலக்குத் தவறாது அடித்து வெற்றியை தமதாக்கிக் கொண்டார். 13-12 என்ற அந்த வெற்றி இலக்கோடு போட்டி முடிவடைந்தது. போட்டியில் மொத்தம் 1 கோல் 2 பெனல்டி மூலம் 13 புள்ளியை புனித பீட்டர்ஸ் கல்லூரி பெற்றதுடன் 1 கோல் 1 ட்ரை மூலம் 12 புள்ளிகளை கிங்ஸ்வூட் கல்லூரி பெற்றது. போட்டிக்கு பிரதீப் பெர்னான்டோ மத்தியஸ்த்தம் வகித்தார்