2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

961

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது என வியாழக்கிழமை (18) முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே கூறிய விடயம், இலங்கையின் பிரபல்ய விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் நம்பகத்தன்மையினை மீண்டும் ஒரு தடவை கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றது. 

இரண்டாம் கட்ட பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி!

மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மஹேல ஜயவர்தனவின் சத உதவியோடும் குமார் சங்கக்கார, திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்போடும் இலங்கை கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடி 274 ஓட்டங்களைப் பெற்றது.  

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்திலேயே சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோரின் விக்கெட்டினை லசித் மாலிங்கவின் பந்துவீச்சு காரணமாக பறிகொடுத்தது. ஆனால், பின்னர் துடுப்பாட வந்த கௌதம் காம்பிரின் 97 ஓட்டங்கள், மஹேந்திர சிங் டோனி ஆட்டமிழக்காது பெற்ற 91 ஓட்டங்கள் என்பவை பலம் சேர்க்க, இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்கள் மீதமிருந்த நிலையில் போட்டியின் வெற்றி இலக்கினை எட்டியது.  

விடயங்கள் இவ்வாறு இருக்க, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்) ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்ற போதும், தனது குற்றச்சாட்டுக்களுக்கான முழுப் பொறுப்பினையும் தான் ஏற்பதாக தெரிவித்துள்ளார். 

இன்னும் கருத்து வெளியிட்ட அவர், ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குழுவினரை இனம்காட்ட முன்னர் நாட்டின் நன்மையைக் கருதி இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.   

”2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது. நான் கூறுவதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இது நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்றது. நான் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். ஆனால், நாட்டின் நன்மையைக் கருதி இது தொடர்பான விடயங்களை வெளியிட விரும்பவில்லை. 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டி, ஆட்ட நிர்ணயம் நடைபெற்ற போட்டி. நாம் வென்றிருக்க வேண்டிய போட்டி.” என மஹிந்தானந்த அளுத்கமகே சிரச தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். 

”என்னால் (இது தொடர்பான) விவாதம் ஒன்றுக்கும் வர முடியும். மக்கள் (இது தொடர்பில்) கவனத்துடன் இருக்கின்றனர். நான் இதற்குள் கிரிக்கெட் வீரர்களை கொண்டுவரவில்லை. ஆனால், சில குழுக்கள் போட்டியில் ஆட்டநிர்ணயம் மேற்கொள்வதுடன் தொடர்புபட்டது நிச்சயமான விடயம்.“ என அளுத்கமகே மேலும் குறிப்பிட்டார்.    

எனினும், இந்த விடயத்திற்கு உடனடியாக தனது டுவிட்டர் கணக்கு மூலமாக பதில் வழங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதம் பெற்ற வீரருமான மஹேல ஜயவர்தன ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்களையும், ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களையும் குறிப்பிடுமாறு தெரிவித்திருந்தார்.  

இதேநேரம், குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்கக்காரவும் ஆட்டநிர்ணயத்திற்கான ஆதாரங்களை குறிப்பிடுமாறு இந்த விடயம் பற்றி கருத்து வெளியிடும் போது நியூஸ் பெர்ஸ்ட் செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.  

”யாருக்கும் ஊகங்கள் தேவையில்லை. இதற்கான உண்மைக் காரணங்கள் வெளியாக முடியும். அதுவே, செயல்கள் தொடர்பில் முக்கியமாக இருக்கும்.” 

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வென்று கொடுத்த அர்ஜுன ரணதுங்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (அதாவது 2017இல்) 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

”நாங்கள் தோற்ற போது, நான் அழுத்தத்திற்கு ஆளாகியதுடன், எனக்கு சந்தேகமும் உருவாகியது. நாம் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் என்ன நடந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும்.” 

”எனக்கு இப்போது எல்லா விடயங்களையும் வெளியிட முடியாது. ஆனால், ஒருநாள் அனைத்தினையும் வெளியிடுவேன். ஆனால், விசாரணை ஒன்று இருக்க வேண்டும்.” என அர்ஜுன ரணதுங்க அப்போது கூறியிருந்தார். 

கடந்த ஆண்டுகளில் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் ஆட்ட நிர்ணயம் உள்ளடங்கலான கிரிக்கெட் ஊழல்கள் அடிக்கடி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. 

இலங்கையின் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும கடந்த (ஜூன்) 02ஆம் திகதி அமைச்சரவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது மூன்று வீரர்கள் விசாரிக்கப்பட்டதாக கூறியதனை அடுத்து, இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையின் கிரிக்கெட் சபை பெயர் குறிப்பிட முடியாத மூன்று முன்னாள் வீரர்களிடம் கிரிக்கெட் ஊழல்கள் தொடர்பில் ஐ.சி.சி. விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தது.  

அவுஸ்திரேலியாவில் மீண்டும் பயிற்சியாளராகும் அசங்க குருசிங்க

இதேவேளை கடந்த ஆண்டு இலங்கை, விளையாட்டுக்களில் ஆட்டநிர்ணயம், சூதாட்டம் போன்றவை இடம்பெறுவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கிய முதல் தெற்காசிய நாடாக பதிவாகியது.   

இதுதவிர இலங்கையின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான டில்ஹார லொக்குஹெட்டிகே கடந்த 2018ஆம் ஆண்டில், T10 கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஊழல் ஒன்றுக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தடையினைப் பெற்ற மூன்றாவது இலங்கையராக மாறியிருந்தார். இதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளரும், முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய, முன்னாள் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் நுவன் சொய்ஸா போன்றோரும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தடையினைப் பெற்றிருந்தனர்.

இதில், சனத் ஜயசூரிய ஆட்டநிர்ணய விவாகரம் ஒன்றுக்கு ஒத்துழைக்காது போனமைக்காக இரண்டு வருடத் தடையினைப் பெற்றதோடு, நுவன் சொய்ஸா ஆட்டநிர்ணயம் தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்டிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<