ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் 8ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயன்திக்கா அபேரத்ன இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
அதேபோன்று பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் உபமாலிகா ரத்னகுமாரி நேற்று (02) வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இம்முறை ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் நிமாலிக்கு முதல் பதக்கம்
ஈரானின் தலைநகரம் டெஹ்ரானில் இன்று…
இந்த மெய்வல்லுனர் போட்டியின் கடைசி நாளான இன்று (03) நடைபெற்ற போட்டியில் கயன்திக்க 1,500 மீற்றர் தூரத்தை 4:26:83 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு கடும் போட்டி கொடுத்த கசகஸ்தான் வீராங்கனை டட்யானா நரோஸ்னக் 2:28:20 வினாடிகளில் போட்டியை முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். வியட்னாம் வீராங்கனை தாய் ஓன் நிகுயென் 4:28:87 வினாடிகளில் போட்டியை முடித்து வெண்கலம் வென்றார்.
கயன்திக்கா அபேரத்ன போட்டியின் முதல் நாளான கடந்த வியாழக்கிழமை பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கையின் நிமாலி லியனாரச்சிக்கு பின்னால் நான்காவது இடம் வந்தார். இலங்கைக்காக முதல் பதக்கத்தை வென்று நிமாலி அந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை நினைவுகூறத்தக்கது.
இந்த வெற்றிகள் மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது.