அசேல குணரத்னவின் அதிரடியில் இறுதிப் பந்தில் இலக்கை அடைந்தது இலங்கை

6822
1st T20I - Sri Lanka vs Australia

அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற விறுவிறுப்பான முதலாவது T-20 போட்டியில் 168 ஓட்டங்களை இலக்காக விரட்டிய இலங்கை அணி அசேல குணரத்னவின் அதிரடியின் உதவியுடன் 20ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் விளாசிய பவுண்டரியுடன் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று T-20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த தென்னாபிரிக்கா

அவுஸ்திரேலிய அணி சார்பாக இன்றைய தினம் மூன்று புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பிக் பாஷ் போட்டிகளில் கலக்கிய மைக்கல் கிளிங்கர், ஆஷ்டன் ட்யுன்னர் மற்றும் பில்லி ஸ்டன்லேக் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

அதேநேரம், 13 பேர் கொண்ட குழாமில் அதிரடி துடுப்பாட்ட வீரர் பென் டன்க் இணைக்கப்பட்டிருந்த போதும், அணியில் அணித் தலைவர் அரோன் பிஞ்ச், ட்ராவிஸ் ஹெட் மற்றும் மைக்கல் கிளிங்கர் ஆகிய நிபுணத்துவ துடுப்பாட்ட வீரர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இலங்கை அணி சார்பாக கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த சுழல் பந்து வீச்சாளர் லக்ஷான் சண்டகன் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். அத்துடன் கடந்த வருடம் பெப்ரவரி மாதம்  இறுதியாக சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றியிருந்த லசித் மாலிங்கவும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். மேலும், இலங்கை குழாமில் இணைக்கப்பட்டிருந்த புதிய வீரர் விக்கும் சஞ்சய இன்றைய போட்டியில் இடம்பெற்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார்.

அந்த வகையில் முதலில் களமிறங்கிய அவ்வணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அணித் தலைவர் அரோன் பிஞ்ச் மற்றும் அறிமுக வீரர் மைக்கல் கிளிங்கர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.

அணித் தலைவர் அரோன் பிஞ்ச் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களையும், பிக் பாஷ் போட்டிகளில் கலக்கிய மைக்கல் கிளிங்கர் நான்கு பவுண்டரிகள் உள்ளடங்கலாக 38 ஓட்டங்களையும் விளாசி அவுஸ்திரேலிய அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

புகைப்படங்கள்: இலங்கை எதிர் அவுஸ்திரேலிய இடையிலான முதல் T-20

அதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 25 பந்துகளுக்கு முகம்கொடுத்து 31 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார்.

இறுதி ஓவர்களில் ஓட்டங்களை குவிக்க எதிர்பார்த்திருந்த அவுஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 19ஆவது ஓவரை வீசிய லசித் மாலிங்க, அதுவரை 37 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஆஷ்டன் ட்யுன்னர் இருவரையும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தி பெரும் பின்னடைவை ஏற்படுத்தனார்.

இதன்மூலம் லசித் மாலிங்கவுக்கு மேலும் ஒரு ஹட்ரிக் வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும் தொடர்ந்து களமிறங்கியிருந்த ஜேம்ஸ் போக்னர் எதிர்கொண்ட ஹட்ரிக் பந்தை, அவர் லாவகமாக தட்டி ஒரு ஓட்டத்தினை பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், இலங்கை அணி சார்பாக அறிமுக வீரர் விக்கும் சஞ்சய உள்ளடங்கலாக லக்ஷான் சண்டகன் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 5 ஓட்டங்களை பெற்றிருந்த போது அணித் தலைவர் உபுல் தரங்க ஓட்டமெதுவும் பெறாமலே பாட் கம்மின்ஸ்சின் பந்து வீச்சில் டிம் பெய்னிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்

எனினும் அதனை தொடர்ந்து களமிறங்கிய டில்ஷான் முனவீர மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்ட அதேவேளை, அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினார். எனினும், நிரோஷன் டிக்வெல்ல 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்களாக 30 ஓட்டங்களுக்கும், அவரை தொடர்ந்து டில்ஷான் முனவீர 44 ஓட்டங்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து இணைந்து கொண்ட அசேல குணரத்ன மற்றும் மிலிந்த சிறிவர்தன இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 6o ஓட்டங்களை பகிர்ந்து அணியை வெற்றி இலக்கிற்கு அருகே கொண்டு சென்றனர்.

அவ்வேளையில் அதிரடியாக பந்து வீசிய ஆஷ்டன் ட்யுன்னர் அடுத்தடுத்து அசேல குணரத்ன மற்றும் மிலிந்த சிறிவர்தனவின் விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய சாமர கபுகெதர மற்றும் சீகுகே பிரசன்ன  ஆகியோர் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்ட அதே நேரம், இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

 இத்தொடரின் இரண்டாவது T-20 போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சைமன்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.