இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி பகல் – இரவு ஆட்டமாக கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் குசல் பெரேரா, திலகரத்ன தில்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குசல் பெரேரா 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த குசல் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, தில்ஷான் 22 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கட்டுக்கு குசல் மெண்டிஸ் உடன் சந்திமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கட்டுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்தது. குசல் மெண்டிஸ் அரைச்சதம் அடித்து 67 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த மேத்யூஸ் ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறினார். சந்திமால் மட்டும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினார். இவரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததால் இலங்கையின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரவில்லை. சந்திமால் அரைச்சதம் அடித்து கடைசி வரை போராடி 80 ஓட்டங்கள் சேர்த்ததால் இலங்கை அணியால் 50 ஓவர்கள் முடிவில் 8 வி்க்கட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்துவீச்சில் பால்க்னெர் 4 விக்கட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.
228 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 58 (92), ஆரொன் ஃபின்ச் 56 (46), ஜோர்ஜ் பெய்லி 39 (54) ஓட்டங்களைப் பெற்றனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 3, லக்ஷன் சந்தகன் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக, ஜேம்ஸ் ஃபோல்க்னர் தெரிவானார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி புதன் கிழமை பகல் இரவு ஆட்டமாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற உள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 227/8 (50)
தினேஷ் சந்திமால் 80*, குசல் மெண்டிஸ் 67, திலகரத்ன டில்ஷான் 22 , ஜேம்ஸ் போல்க்னர் 38/4, மிச்சல் ஸ்டார்க் 32/3
அவுஸ்திரேலியா – 228/7 (46.5)
ஆரோன் பின்ச் 56, ஸ்டீவ் ஸ்மித் 58, ஜோர்ஜ் பெய்லி 39 , டில்ருவான் பெரேரா 48/3, லக்ஷன் சந்தகன் 33/2
அவுஸ்திரேலிய அணி 3 விக்கட்டுகளால் வெற்றி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்