இலங்கை நீர்சார் விளையாட்டு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, முதல்முறையாக இடம்பெறும் தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகள், நேற்று மாண்புமிகு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தெற்காசிய பிராந்தியத்திலுள்ள ஏழு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400க்கும் மேற்பட்ட நீர்சார் விளையாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் இந்த முதலாவது தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகள் (SAAC) இடம்பெறுகின்றன.
நேற்று இடம்பெற்ற ஆரம்ப விழாவில், நீர்சார் போட்டிகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக்கில் பங்கு கொண்ட, அதேபோன்று இந்தியாவில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மேத்யுஸ் அபேசிங்க, வீரர்களுக்கான சத்தியப்பிரமாணத்தை வாசித்தார்.
இந்நிகழ்வின்போது இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலைத்தீவு, பங்களாதேஷ், நேபால் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி எராளமான நீர்சார் விளையாட்டு வீரர்கள் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது வரவேற்புரையை நிகழ்த்திய மாண்புமிகு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ”உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளும் அதே நேரம், நாங்கள் எல்லோரும் வேறுபாடுகளை மறந்து, ஒரு கொடியின் கீழ் இல்லாது, ஒரே தெற்காசிய வீரர்களாக இப்போட்டிகளில் நேர்மையாக பங்குபற்றுவோம்” எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் இலங்கை நீர்சார் விளையாட்டு ஒன்றியத்தின் (SLASU) தலைவரும், இலங்கை கடற்படை தலைமைக் கட்டளை அதிகாரியுமான ஜயந்த கமகே, இலங்கை நீர்சார் விளையாட்டு ஒன்றியத்தின் செயலாளர் மிரங்க குணதிலக்க, போட்டி அனுசரனையாளர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு சுகததாச உள்ளக நீச்சல் அரங்கில் நேற்று (18ஆம் திகதி) ஆரம்பமாகிய இந்த போட்டிகள், இம்மாதம் 23ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நிறைவுபெறும்.
நீச்சல் போட்டிகள், நீரில் பாய்தல் போட்டிகள் என்பவற்றுடன், நீர்ப்பந்தாட்ட போட்டிகளும் மின்விளக்கு வெளிச்சத்தின் கீழ் இடம்பெற உள்ளமை இப்போட்டித் தொடரின் சிறப்பம்சமாக உள்ளது.
இளம் நீச்சல் போட்டியாளர்களுக்கு இந்த சர்வதேச அரங்கில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றமை முக்கிய அம்சமாகும். 13 முதல் 15 வயது, 15 முதல் 17 வயது மற்றும் 18 வயதுக்கு மேல் திறந்த பிரிவுகள் என வகைப்படுத்தி இந்த போட்டி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நீர்ப்பந்தாட்ட போட்டிகள் 18வயதுக்கு கீழ் மட்டுமே இடம்பெறும்.
மேலும், இவ்விழாவை அலங்கரிப்பதற்காக இலங்கை கடற்படையை சேர்ந்த நடனப்பிரிவு, மகளிர் கல்லூரி மற்றும் விசாகா வித்தியாலய மாணவிகளோடு இணைந்து இலங்கை கலாசாரங்களை பிரதிபலிக்கும் முகமாக நடனமொன்றையும் நேற்றைய நிகழ்வில் காட்சிப்படுத்தினர்.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட நீர்ப்பந்தாட்ட போட்டிகளுடன் நேற்றைய ஆரம்ப நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
தொடர்ந்து பல நாட்களுக்கு இடம்பெறும் இந்தப் போட்டிகள் குறித்த செய்திகளை தெரிந்துகொள்ள thepapare.com உடன் இணைந்திருங்கள்.