இலங்கை கிரிக்கெட் வீரர்களின் வாரியத்தினை வலுவூட்டியுள்ள 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ண சம்பியன்கள்

1585
Sri Lankan Cricketers Association launches Benevolent Fund

நமது தாயகத்திற்கு பெருமை தேடித்தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கு உதவும் வகையிலான விஷேட நலன்புரி நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுத்தந்த வரலாற்று கதாநாயகர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வாரியம் (SLCA) அறிவித்துள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிதியத்திற்கு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியின் பங்களிப்புடன் இதுவரை நான்கு மில்லியன் ரூபா வரையிலான பணம் வழங்கப்பட்டுள்ளது. அது முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களின் நிதித் தேவைகளின் போதும், மருத்துவ வசதிகளுக்கும், ஏனைய அவசரமான பணத் தேவைகளுக்கும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (3ஆம் திகதி) SSC இல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த, 1996ஆம் ஆண்டின் இலங்கை குழாத்தில் இடம்பெற்ற வீரரும், இந்நிதியத்தின் நம்பிக்கையாளருமான ரொஷான் மஹாநாம, இவ்வமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தினாலோ (SLC), சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினாலோ (ICC) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தேவை இல்லை” என்று தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.

மேலும், “2012இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் மூலம், நாங்கள் ஹேமாஸின் உதவியுடன் அப்போது 240 பிள்ளைகளின் 5 வருடங்களிற்கு போதுமான கல்வித் தேவைகளுக்கு உரியவற்றை வழங்கி அவர்களின் கல்வியை மேம்படுத்த உதவி செய்திருந்தோம். தற்போது, இந்நிதியம் மூலம் எங்களின் காலகட்டத்திற்கு முன்னர் விளையாடிய வீரர்களுக்கு நாங்கள் உதவ தீர்மானித்துள்ளோம். ஏனெனில் முன்னாள் வீரர்கள் பல வழிகளில் எமக்கு உதவியிருக்கின்றார்கள். அதற்காக நாம் அவர்களுக்காக கடமைப்பட்டிருக்கின்றோம்.

விளையாட்டில் அரசியல் கொண்டு வரும் சிலர் எமது இந்த கிரிக்கெட் வீரர்களின் வாரியத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும் எங்கள் முழு நோக்கம் தேவையுடையவர்களுக்கு உதவுவதாகவே அமைந்திருக்கின்றது” என்றார்.

இவ்மைப்பின் மூலம் நிதி ரீதியான தேவையுடையவர்களின் வேண்டுகோள்கள், இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் பந்து வீச்சாளர் கிரேம் லேப்ரூயின் தலைமையின்  கீழ் இருக்கும் 96 ஆம் ஆண்டு இலங்கை அணியின் குழாம் அல்லது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வாரியத்தின் அங்கத்தவர் ஒருவரால் மேற்கொள்ளப்படவேண்டும்.

பின்னர் அது நிதியத்தின் நம்பிக்கையாளர்கள் முன் கொண்டு வரப்பட்டு, அவர்களின் அனுமதியின்  பின்னர் 48 மணித்தியாலங்களுக்குள் வேண்டுகோள் விடப்பட்டவருக்குரிய உதவிகள் இவ்வமைப்பின் ஊடாக வழங்கப்படும்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வாரியமும், 1996ஆம் ஆண்டு உலக கிண்ண சம்பியன்களும் இணைந்து, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்திட்டத்திற்கான நிதிசேகரிப்பு பணிகளில் 2016ஆம் ஆண்டு முழுவதும் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் இலங்கை அணியில் முன்னர் 3ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அசங்க குருசிங்க கருத்து தெரிவிக்கும்பாழுது,  

1996ஆம் ஆண்டு நாம் பெற்றுக்கொண்ட மகத்தான  வெற்றியிலிருந்து ஒன்றாக செயற்படும் நாங்கள், இந்த திட்டத்தினை ஆரம்பிக்கின்ற போதும் ஒன்றாகவே இருந்தோம். எங்களில் அனைவரும் எந்த தயக்கமும் இல்லாமல் இதற்கு உதவ முன்வந்திருந்தனர். அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள் வரை தங்கியிருந்து, இரண்டு T20 போட்டிகள் மற்றும் இரண்டு நிகழ்வுகளில் பங்குபற்றி இதற்காக நிதி திரட்ட பாடுபட்டிருந்தோம். “

இந்த நன்கொடை நிதியம் மூலம் A.J. சமரசேகர மற்றும் ரஸ்ஸல் ஹர்மர் ஆகியோருக்கு முதலாவது பண உதவி வழங்கும் நிகழ்வு, 1996ஆம் இலங்கை குழாத்தில் இருந்த வீரர்களால் நேற்று நடைபெற்ற வைபவத்தில் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் எனக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்த முன்னாள் வீரர்களை தற்போது பார்க்கும்போது எனது உள்ளம் உருகும். நாங்கள் தற்போதைய தலைமுறைக்குரிய வீரர்களை கவனிப்பதை விட முன்னாள் வீரர்களை கவனித்து  இத்திட்டத்தின் மூலம் அவர்களை பயனடையச் செய்வதையே கடமையாக கருதுகின்றோம்.

அடுத்து, தற்போதைய வீரர்களிடம் இருந்தும் இத்திட்டத்திற்குரிய உதவியினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் வரும் காலங்களில் முன்னாள் வீரர்களாக மாறப்போகின்றவர்களாக அவர்களே இருக்கின்றனர்.”

என்று தனது வேண்டுகோளினை இன்றைய இளம் வீரர்களிடம், 1996 ஆம் ஆண்டிற்குரிய உலக கிண்ணத்தினை கைப்பற்றுவதற்கு இலங்கை அணிக்கு உறுதுணையாக இருந்த முக்கிய ஹீரோவும், இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய  தலைவருமான அரவிந்த டி சில்வா கேட்டிருந்தார்.