25 வருடங்களின் பின் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த உலகக் கிண்ண பதக்கம்

284

இலங்கை கிரிக்கெட்டை சர்வதேச அளவில் கொண்டு சென்ற, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக இன்று வரைக்கும் நிலைகொண்டுள்ள முக்கிய வெற்றிதான் 1996 உலகக் கிண்ண வெற்றி.

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் அணி, ஒருநாள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன

>> Video – ஒருநாள் தொடரில் கலக்கிய இலங்கையின் மும்மூர்த்திகள்..!|Sports RoundUp – Epi 153

இந்த நிலையில், இலங்கை அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டுகள் பூர்த்தி விழாவை முன்னிட்டு வீரர்களை கௌரவிக்கும் விசேட வைபவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (17) காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

பிரதமர் அலுவலகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்தது.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் ஐசிசி இனால் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கிய பதக்கங்கள் இவ்வளவு காலமாக இலங்கை கிரிக்கெட் சபையில் காணப்பட்ட நிலையில், அப்பதக்கங்கள் இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது பிரதமரின் கரங்களினால் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அதுமாத்திரமின்றி, உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு QR குறியீட்டுடனான முதலாவது நினைவு முத்திரை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வழங்கப்பட்டதுடன், அவர்களினால் பிரதமர் மற்றும் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

>> இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் ஏன் இரண்டாமிடம்?

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் ஆற்றிய உரையில், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த வெற்றி இன்று நேற்று இடம்பெற்றது போன்று நினைவிலுள்ளது. இன்று எமது கிரிக்கெட் களத்தில் இடம்பெறுவதை நோக்கும் போது எமது இந்த வெற்றியை கிரிக்கெட் இரசிகர்கள் அடிக்கடி நினைவுபடுத்துகின்றனர் என்பதை நான் கூற வேண்டும்.

நிகழ்காலத்தை சரிசெய்ய கடந்த காலம் முக்கியமானதாகும். அன்று அரங்கில் விளையாடியவர்கள் சாதாரண கிரிக்கெட் வீரர்கள் அல்லர். நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொண்ட இளைஞர்களாவர். அன்றைய எமது வெற்றியை ஆசிய நாடுகள் தாம் பெற்ற வெற்றியாகவே கருதின.

எமக்கு நிகழ்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்பவே கடந்த காலம் உள்ளது. இன்று எமக்கு கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு பாடமாக கடந்த காலமே உள்ளது. அந்த கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் இன்று நாமுள்ள துயர நிலையிலிருந்து விடுபட முடியும் என நான் நம்புகின்றேன்.  

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை, மனிதநேயம் என்பவற்றை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் அதேபோன்றதொரு வெற்றியை பெற முடியும் என நான் நம்புகின்றேன்” என பிரதமர் தெரிவித்தார்

>> இலங்கை அணிக்கு அபராதம் : குணதிலக்கவுக்கு எச்சரிக்கை!

இந்த நிலையில், உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இந்த வைபவத்தில் உரையாற்றுகையில்

“சர்வதேசத்தின் மத்தியில் நாம் பிரபலமடையாத காலத்திலும் பிரதமர் அவர்கள் எமது கிரிக்கெட் அணி சார்பாக செயற்பட்டமை எமக்கு நினைவிருக்கிறது. நாம் ஒரு அணி என்ற ரீதியில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 25 ஆண்டுகள் கடந்தும் இந்நாடு எம்மை மறக்கவில்லை.

எங்களுக்குள் நிர்வாக சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் சிரேஷ்ட வீரர்களாகிய நாங்கள் இளம் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த காலத்தில் கிரிக்கெட்டுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் முறையான நிர்வாகத்துடன் இந்நாட்டில் கிரிக்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<