இந்திய வீரர்களுக்கு 6 நாட்கள் விசேட உடற்தகுதி பயிற்சி முகாம்

ICC Men's Cricket World Cup 2023

232

ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி உட்பட ஆசியக் கிண்ணம் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 18 வீரர்களுக்கும் சிறப்பு உடற்தகுதி பரிசோதனை முகாமொன்றை நடத்த BCCI நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பரிசோதனைகளில் பெரும்பாலானவை தேசிய கிரிக்கெட் அகடமி (NCA) அல்லது BCCI இன் மருத்துவக் குழுக்களால் வழக்கமாக வீரர்களுக்கு நடத்தப்படும் உடற்தகுதி பரிசோதனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீண்ட காலமாக தேசிய அணியில் இடம் பெறாத வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை நடத்தப்படும் என்றும், அனைத்து வீரர்களும் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பிசிசிஐ தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்பாக பெங்களூருவில் இன்று (24) ஆரம்பமாகும் ஆறு நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆசியக் கிண்ணத் தொடருக்கு தேர்வான 18 வீரர்களில் 15 பேர் ஆலூரில் நடைபெறும் சிறப்புப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளனர். அயர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று முகாமில் இணைகின்றனர்.

6 நாட்கள் சிறப்புப் பயிற்சி முகாமில் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற வீரர்களின் உடற்தகுதி கண்கானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே போல, ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் விதமாக அணி வீரர்களிடையே பிணைப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முகாமில் தற்போதுள்ள 15 வீரர்களும், முதல் நாளில் சில உள்ளக அமர்வுகளில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். அதன்பிறகு, உடற்தகுதி பரிசோதனைகளில் பங்கேற்கின்றனர். ஏதிர்வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து பயிற்சி முகாமும், திறன் மேம்பாட்டு முகாமும் தனித்தனிக் குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்படவுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20i தொடரில் இடம்பெறாத வீரர்கள் ஒவ்வொருக்கும் தனித்தனியாக உணவுக் கட்டுப்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னணி வீரர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது.

முழுமையாக உடற்தகுதி பெறாமல் உள்ள கேஎல் ராகுல் மீது இந்த முகாமில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுவந்த ராகுல், ஆசியக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ராகுல் முழுமையான உடற்தகுதியுடன் இல்லை என்று இந்தியத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், இளையோர் அணி வேகப்பந்து வீச்சாளர்களை வலைப்பயிற்சியில் எதிர்கொண்டு பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு லிப்பிட் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவுகள், யூரிக் அமிலம், கால்சியம், வைட்டமின் B12 மற்றும் வைட்டமின் D, கிரியேட்டினின் (சிறுநீரக செயல்பாட்டை சரிபார்க்க) மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவை சரிபார்க்கப்படும். எலும்பு அடர்த்தியை சரிபார்க்க டெக்ஸா பரிசோதனையும் இதில் அடங்கும்.

இதன்போது விவிஎஸ் லட்சுமண், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் உடற்கூற்று நிபுணர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை, ஆகஸ்ட் 30ஆம் திகதி பெங்களூருவில் இருந்து இந்திய அணி, இலங்கைக்குப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 2ஆம் திகதி பல்லேகலவில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசியக் கிண்ணத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<