150 வருட பாடசாலை கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய 17 வயது வீரர்

230

இலங்கைக்கு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்த வீரர்களின் ஒருவர் தான் அர்ஜுன ரணதுங்க. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற அவர், பாடசாலைக் காலம் முதல் கிரிக்கெட்டில் அதீத திறமைகளை வெளிக்காட்டினார். 

இதன்காரணமாக இளம் வயதிலே இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த அவர், தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார்.

எனவே, அர்ஜுன ரணதுங்கவைப் போல பாடசாலைக் காலம் முதல் அபார திறமைகளை வெளிப்படுத்தி வந்த அரவிந்த டி சில்வா, மஹேல ஜயவர்தன போன்ற வீரர்கள் இளம் வயதிலே படைத்த சாதனையை இதுவரை எந்தவொரு இலங்கை வீரரினாலும் முறியடிக்கப்படாவில்லை.

கொரோனா வைரஸ் எதிரொலி: டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் ……………..

இந்த நிலையில், 150 வருடங்கள் பழமையான இலங்கையின் பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் வீரரொருவரினால் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 409 ஓட்டங்களை எடுத்து காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் நவோத் பரணவிதான புதிய சாதனை படைத்துள்ளார்

இம்முறை பாடசாலைகள் கிரிக்கெட் பருவகாலத்தில் மஹிந்த கல்லூரியின் கடைசிப் போட்டியாக காலி மஹிந்த கல்லூரியில் நடைபெற்ற குறித்த போட்டியில் அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரிக்கு எதிராகவே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி, 123 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 679  ஓட்டங்களைக் குவித்தது

இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய நவோத் பரணவிதான, 327 பந்துகளுக்கு முகங்கொடுத்து 19 சிக்ஸர்கள், 39 பௌண்டரிகள் உள்ளடங்கலாக  409 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் 400 ஓட்டங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் இவர் இதன்மூலம் படைத்தார்.

அத்துடன், இலங்கையில் நடைபெறுகின்ற தொழில்முறை ரீதியிலான கிரிக்கெட் போட்டியொன்றில் வீரரொருவரினால் 400 ஓட்டங்களைக் குவித்த முதலாவது சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியது

இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டு கோட்டே புனித தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த மைக்கல் வென்ஹொப் 356 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

எனினும், கடந்த மாதம் புனித அந்தோனியார் கல்லூரி மாணவனான அவிஷ்க தரிந்து கொழும்பு லும்பினி கல்லூரி அணிக்கெதிராக 350 ஓட்டங்களை எடுத்து அந்த சாதனையை நெருங்கியிருந்தார்

எனவே, அந்த சாதனையை சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு இலங்கை 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியைச் சேர்ந்த 17 வயதுடைய இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவோத் பரணவிதான முறியடித்துள்ளார்.

13 வயது மற்றும் 15 வயதுப் பிரிவுகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள இவர், அண்மையில் நிறைவுக்கு வந்த இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியிருந்தாலும், அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனமை இங்கு குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் காலி மஹிந்த கல்லூரி அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 679 ஓட்டங்களைக் குவித்தது. இது பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் அணியொன்று 600 ஓட்டங்களைக் கடந்த முதலாவது சந்தர்ப்பமாகப் பதிவாகியது.

இந்த நிலையில், தனது சாதனை குறித்து பேசிய நவோத் பரணவிதான, “நான் இந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழையும் போது 100 ஓட்டங்களை நிச்சயம் குவிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது

100 ஓட்டங்களைக் கடந்த பிறகு இன்னும் கொஞ்சம் ஓட்டங்களைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், 200 ஓட்டங்களைக் கடந்த பிறகு எனது மனதில் இருந்த பயம் இல்லாமல் போனது. இதனால் எனது வழமையான துடுப்பாட்டத்தை முன்னெடுத்து ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டேன்.  

கொரோனா அச்சம் : தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ரொஷான் மஹாநாம

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ……….

300 ஓட்டங்களை நெருங்கிய போது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் 350 ஓட்டங்கள் தான் சாதனையாக உள்ளது என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். அத்துடன் 400 ஓட்டங்கள் மைல்கல்லை இதுவரை எந்தவொரு வீரராலும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது

எனினும், மறுபுறத்தில் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியைக் கொடுத்தாலும், எனது அனுபவத்தைப் பயன்படுத்தி நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்தேன். இறுதியில் சாதனையும் படைத்தேன்” என மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தைப் பற்றிப் பேசிய இவர், “நான் எனது ஆரம்பக் கல்வியை காலி மஹிந்த கல்லூரியில் தான் முன்னெடுத்தேன். எனக்கு 9 வயதாக இருக்கும்போது மென்பந்து விளையாட ஆரம்பித்தேன். இதன்போது என்னைப் பார்த்துக் கொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் என்னை கடினப்பந்து கிரிக்கெட் விளையாட அழைத்தார்.  

அவ்வாறு கிரிக்கெட் விளையாடி 13 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்தேன். எனது அப்பா ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். ஆரம்பத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அப்பா சம்மதம் தெரிவித்தாலும், அம்மா அவ்வளவு தூரம் விரும்பவில்லை.

விளையாட வேண்டாம் படித்தால் போதும் என அம்மா அடிக்கடி சொல்வார். ஆனால் பிற்காலத்தில் எனது திறமையை கண்ட அம்மா, கிரிக்கெட் விளையாட முழு ஆதரவு கொடுத்தார். தற்போது எனது பெற்றோர், அண்ணா மற்றும் தம்பியும் மிகப் பெரிய ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அண்ணா மஹிந்த கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதுடன், தம்பி தற்போது கால்பந்து அணியில் உள்ளார்

நான் இலங்கை 15 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளேன். அதன்பிறகு 19 வயதுக்குட்பட்ட தென் மாகாண அணிக்காக 2 தடவைகள் விளையாடியுள்ளேன்.

தற்போது 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடி வருகின்றேன். இம்முறை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடினேன் 

இலங்கை கிரிக்கெட் வரலாற்றை மாற்றி இன்றுடன் 24 வருடம்

மறைந்த டொனி க்ரைக் தொலைக்காட்சியில், “இலங்கை அணி விளையாட்டுத்துறையில் தங்களுடைய ………….

எனினும், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடிய காரணத்தால் என்னால் பாடசாலை அணிக்காக பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. ஆனாலும், 6 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும்  2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 670 ஓட்டங்களைக் குவித்தேன்” என தெரிவித்தார்.

இதேநேரம், தற்போது உயர்தரம் கலைப் பிரிவில் கல்வி கற்று வருகின்ற சகலதுறை வீரரான நவோத் பரணவிதான, 2021ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளார்

இதுஇவ்வாறிருக்க, நவோத் பரணவிதானவை இந்தளவு தூரத்துக்கு அழைத்து வந்தவர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில், “எனக்கு உதவி செய்த பலர் உள்ளனர். அவர்களில் எனது அப்பாவின் நண்பரான நவீன் ஹேரத்தை முதலில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அத்துடன், எனக்கு கிரிக்கெட் பயிற்சியளித்த லகி அரபவல, சுனெத் குடாஹெட்டி, தனுஷ்க தெனகம உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இறுதியாக தனது எதிர்கால இலட்சியம் குறித்து பேசிய அவர், மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல எனக்கும் இலங்கை தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் மிகப் பெரிய கனவாக உள்ளது. நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்க்க வேண்டும். இதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என கூறினார்.

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து

கொரோனா வைரஸ் பீதியானது உலகினை அச்சுறுத்தி வரும் நிலையில், அது கிரிக்கெட் விளையாட்டினையும் ………

எனவே, அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சிவ்வா, மஹேல ஜயவர்தன, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், லசித் மாலிங்க, போன்று நட்சத்திர வீரர்களை உருவாக்க வேண்டுமாயின் நவோத் பரணவிதான, அவிஷ்க தரிந்து போன்ற இளம் வீரர்களது திறமைகளை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகளின் பொறுப்பாகும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<