இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 17 பேர், இலங்கை கிரிக்கெட் சபையுடனான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஒப்புதல் அளித்துள்ளதாக கிரிக்கெட் சபை ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. எனினும் இதில் லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத் போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்குரிய கொடுப்பனவுகள் தொடர்பாக வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்குமிடையில் மிக நீண்ட காலமாக சர்ச்சையான நிலைமை காணப்பட்டு வந்த நிலையிலேயே இந்த புதிய ஒப்பந்தத்திற்கு வீரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த ஒரு வருடத்துக்கான ஒப்பந்த வரைபு கிரிக்கெட் வீரர்களின் செயல் திறன்களின் அடிப்படையில், கொடுப்பனவுகள் உட்பட சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சில கிரிக்கெட் வீரர்கள் தமது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கடந்த சில நாட்களாக பல்வேறான செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையிலேயே தற்பொழுது 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்வந்துள்ளனர்.
எனினும், எந்த பிரிவுகளின் கீழ் மற்றும் எவ்வாறான கொடுப்பனவுகளுக்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்ற விபரங்களை இலங்கை கிரிக்கெட் இன்னமும் அறிவிக்கவில்லை.
ஒப்புதல் அளித்துள்ள வீரர்கள்
1. அஞ்சலோ மெத்யூஸ்
2. தினேஷ் சந்திமல்
3. ரங்கன ஹேரத்
4. குசல் ஜனித் பெரேரா
5. டிமுத் கருணாரத்ன
6. கவ்ஷால் சில்வா
7. சுரங்க லக்மால்
8. நுவன் பிரதீப்
9. தனஞ்சய டி சில்வா
10. துஷ்மன்த சமீர
11. தனுஷ்க குணதிலக்க
12. மிலிந்த சிரிவர்தன
13. குசல் மெண்டிஸ்
14. லஹிரு திரிமன்ன
15. தில்ருவன் பெரேரா,
16. லக்ஷான் சண்டகன்
17. ஜெப்பரி வந்தர்செ
அண்மையில் சர்வதேச போட்டிகளுக்கு வந்திருக்கின்ற மெண்டிஸ், சண்டகன், வந்தர்செ, தனஞ்சய, சமீர மற்றும் குணதிலக்க போன்ற சில புதுமுக கிரிக்கெட் வீரர்களுக்கு குறித்த ஒப்பந்தம் முதல் தடவையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி இம்மாத இறுதியில் அங்கு செல்ல இருக்கின்றது. பல சர்ச்சைகள் நிலவிய போதும், குறித்த வீரர்கள் 17 பேரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இந்த சுற்றுப்பயணம் முக்கிய காரணியாய் இருந்தது.
இளையோர், வளர்ந்து வரும் மற்றும் முத்த வீரர்கள் என 6௦ பேரை கொண்ட குழுவிலிருந்து, 30 கிரிக்கெட் வீரர்கள் இந்த தேசிய ஒப்பந்தத்தில் கைசாத்திடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், 17 பேர் கொண்ட இந்த பட்டியலில் காயம் காரணமாக லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத் ஆகியோர் பெயரிடப்படவில்லை. அதேநேரம், அனுபவம் வாய்ந்த திசர பெரேரா, சீகுகே பிரசன்னா, உபுல் தரங்க மற்றும் சஜித்ர சேனநாயக்க உட்பட பல முக்கிய வீரர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.