இலங்கை அணியின் 14 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

India Tour Of Sri Lanka - 2021

2095

இந்திய தொடரை இலக்காகக் கொண்டு கொழும்பில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 14 பேர் கொண்ட இலங்கை அணிக் குழாத்தில் இடம்பெற்ற சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஏற்கெனவே இலங்கை அணியின துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்;ட் பிளவர், தரவு ஆய்வாளர் ஷிரன்த நிரோஷன ஆகிய இருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்துன் வீரக்கொடியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

இவர்கள் மூவருக்கும் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இலங்கை அணி, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடர், T20 தொடரில் விளையாடி கடந்த 6ஆம் திகதி நாடு திரும்பியது. 

இலங்கை அணி நாடு திரும்பிய சில நாட்களில் இங்கிலாந்து அணியில் உள்ள 3 வீரர்கள் உட்பட்ட எழுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது

இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், தரவு ஆய்வாளர் ஷிரன்த நிரோஷன ஆகியோருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால் வீரர்களுக்கு சாதாரண தனிமைப்படுத்தும் காலத்தைக் மேலதிகமாக 3 நாட்கள் நீட்டித்து இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது. அதேபோல, இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இலங்கை பயிற்றுவிப்பு குழுவில் மேலுமொரு கொவிட் தொற்றாளர்

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் பயிற்சிகளைப் பெற்று வந்த சந்துன் வீரக்கொடி, பானுக்க ராஜபக்ஷ, அசேல குணரத்ன, அஞ்சலோ பெரேரா, அஷான் பிரியன்ஞன் ஆகிய வீரர்களை நேற்று மாலை தம்புள்ளைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மறுபுறத்தில், இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பி கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்த இலங்கை வீரர்களை கொழும்பு சினமன்ட் கிரேன்ட் ஹோட்டலில் தனிமைப்படுத்;துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே தம்புள்ளைக்கு அனுப்பப்பட்ட இலங்கை வீரர்களில் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவருடன் நேரடித் தொடர்பில் இருந்து பயிற்சிகளில் பங்குபற்றிய பானுக்க ராஜபக்ஷ, அசேல குணரத்ன, அஞ்சலோ பெரேரா உள்ளிட்ட வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்தியா தொடருக்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக குறித்த வீரர்களை தம்புள்ளைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில், தம்புள்ளையில் 24 கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட மற்றொரு குழு பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. 

இதன்படி, குறித்த வீரர்கள் இன்றைய தினம் தம்புள்ளையில் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடுவதற்கு தயாராக இருந்தாகவும், மழை காரணமாக குறித்த போட்டி ஆரம்பமாவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் தான் கொழும்பில் இருந்து வந்த குறித்த 14 வீரர்களினதும் PCR பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியிருந்ததுடன், இதில் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இலங்கை – இந்தியா இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

எதுஎவ்வாறாயினும், கொழும்பில் இருந்து தம்புள்ளை சென்ற வீரர்களுக்கும், இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கும் நாளைய தினம் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இதன் முடிவுகளைப் பொறுத்து இந்திய தொடர் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் அணி ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக 17ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

தற்போது இலங்கை அணி வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் ஒருநாள் தொடர் அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்வதற்கு இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இலங்கை – இந்திய தொடர்களில் மீண்டும் திகதி மாற்றம்

இதன்படி, ஜுலை 18, 20, 23ஆம் ஆகிய தினங்களில் ஒருநாள் தொடரும் 25, 27, 29 ஆகிய திகதிகளில் T20 தொடரும் இடம்பெறும் என்று மீண்டும் ஒரு தடவை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் உள்ளிட்ட இருவக்கும், கொழும்பில் பயிற்சிகளைப் பெற்றுவந்த வீரரொருவருக்கும் தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இந்திய தொடரில் தம்புள்ளையில் பிரத்தியேகமாக பயிற்சிக்ளை மேற்கொண்டு வந்த 24 பேர் கொண்ட இலங்கை அணியை களமிறக்க இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…