SAG – முப்பாய்ச்சலில் பதக்கம் வென்ற சப்ரின் : இலங்கைக்கு மேலும் 4 தங்கங்கள்

228

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாவது நாளான இன்றைய தினம் (05) இலங்கை வீரர்கள் 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினர். 

இதில் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் லக்ஷிகா சுகன்தியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றரில் அருண தர்ஷன, டில்ஷி குமாரசிங்கவும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் ஹசினி ப்ரபோதாவும் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

அத்துடன், ஆண்களுக்கான 400 மீற்றரில் லக்மால் ப்ரியன்தவுக்கும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் விதூஷா லக்ஷானிக்கும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.  

இதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் ரொஷான் தம்மிக, பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இரேஷானி இராஜசிங்க மற்றும் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சப்ரின் அஹமட் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.  

SAG 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் …………

இதன்படி இன்று காலை நிறைவுக்கு வந்த மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

சப்ரினுக்கு முதல் பதக்கம்

முப்பாய்ச்சல் போட்டிகளில் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் 15.95 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.

அண்மைக்காலமாக தேசிய மட்ட போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வருகின்ற சப்ரின், முதல்தடவையாக சர்வதேச போட்டியொன்றில் பங்கேற்று, பதக்கமொன்றை வெற்றி கொண்டமை சிறப்பம்சமாகும்.

அத்துடன், முப்பாய்ச்சல் போட்டியின் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான கிரேஷன் தனஞ்சய 15.91 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதேநேரம், இந்திய வீரர்களான கார்த்திக் உனிக்ராஜ் (16.47 மீற்றர்) மற்றும் மொஹமட் சலாஹ் (16.16 மீற்றர்) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

லக்ஷிகாவுக்கு முதல் தங்கம்

பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட லக்ஷிகா சுகன்தி, 13.68 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

நேற்றுமுன்தினம் (03) நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட அதிசிறந்த காலத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது இரண்டாவது பதக்கத்தை சுவீகரித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் பங்குகொண்ட மற்றுமொரு இலங்கை வீராங்கனையான இரேஷானி இராஜசிங்க வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 14.18 செக்கன்களுக்குள் போட்டித் தூரத்தை ஓடி முடித்து திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் 2016 இந்தியாவில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் ரொஷான் தம்மிக்க வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 14.42 செக்கன்களில் நிறைவு செய்தார். அவருடன் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீரரான ஹசித நிர்மால் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

இலங்கை கபடி அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான்!

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய ………..

அருண, டில்ஷிக்கு தங்கம்

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, 46.69 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். மற்றொரு இலங்கை வீரரான லக்மால் ப்ரியன்த (46.79 செக்.) வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதேநேரம், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் பங்குகொண்ட டில்ஷி குமாரசிங்க, 53.40 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

400 மீற்றர் ஓட்டப் போட்டிகளின் தேசிய கனிஷ் சம்பியன்களான இவ்விருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுபனின் அற்புத கோலினால் நேபாலை சமப்படுத்திய இலங்கை

தெற்காசிய விளையாட்டு விழாவில், போட்டியை நடத்தும் ……….

ஹிசினி, விதூஷா அபாரம்

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை வீராங்கனைகளான ஹசினி ப்ரபோதா 13.21 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், விதூஷா லக்ஷானி 13.14 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான விதூஷா லக்ஷானி கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நேற்று (04) நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்றவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக களமிறங்கிய சாரங்கி சில்வா தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாவது நாள் நிறைவுக்குவரும் போது இலங்கை அணி 8 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது

>>SAG செய்திகளைப் படிக்க <<