பல்கலைக்கழக கிரிக்கெட் தொடரில் சப்ரகமுவ பல்கலைக்கழக அணிக்கு முதல் வெற்றி  

450

இலங்கையின் பல்கலைக்கழகங்கள் இடையே, 13 ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெறும் விளையாட்டு விழாவில் (SLUG) கிரிக்கெட் தொடரும் ஒரு அங்கமாக நடைபெற்றுவருகின்றது. 

யாழ் பல்கலைக்கழக அணிக்கு தொடர்ந்து இரண்டாவது வெற்றி

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 13….

இந்த கிரிக்கெட் தொடரின் குழுநிலை போட்டி ஒன்றில் இன்று (3) வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக  மைதானத்தில் வைத்து, கிழக்கு பல்கலைக்கழக அணியினை எதிர்கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட மோதலாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக அணியின் தலைவர் DGC. டில்ஷான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக பெற்றுக்கொண்டார். 

பல்கலைக்கழக அணிகள் இடையிலான இந்த கிரிக்கெட் தொடரில், கிழக்குப் பல்கலைக்கழக அணியும், சப்ரகமுவ பல்கலைக்கழக அணியும் ஏற்கனவே தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவியிருந்தன. எனவே, இரண்டு பல்கலைக்கழக அணிகளும் தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கின. 

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய சப்ரகமுவ பல்கலைக்கழக அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழக அணியின் துடுப்பாட்டம் சார்பாக GYGND. திலகரட்ன 36 ஓட்டங்கள் குவித்து அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்தார். இதேநேரம், சப்ரகமுவ அணித்தலைவர் DGC. டில்ஷான் 32 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில் கிழக்கு பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சு சார்பாக AGCK. ரத்னாயக்க மற்றும் K. சர்மிளன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் புகைப்படங்களை பார்வையிட

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 158 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய கிழக்கு பல்கலைக்கழக அணி, பதிலுக்கு துடுப்பாடியது. 

கிழக்கு பல்கலைக்கழக அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் S. ரஞ்சீவ் சிறந்த ஆரம்பத்தை கொடுத்த போதிலும் ஏனையோர் துடுப்பாட்டத்தில் ஜொலிக்க தவறினர். இதனால், கிழக்கு பல்கலைக்கழக அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

கிழக்கு பல்கலைக்கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த S. ரஞ்சீவ் அரைச்சதம் ஒன்றுடன் 71 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், S. மகிந்த குமாரும் 35 ஓட்டங்களுடன் போராட்டம் காண்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சு சார்பில் MRR. சந்துன் விக்கிரமசிங்க 4 விக்கெட்டுக்களையும், KGKW. விக்கிரமசிங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் சுருக்கம்

சப்ரகமுவ பல்கலைக்கழக அணி – 157 (42.4) – GYGND. திலகரட்ன 36, DGC. டில்சான் 32, AGCK. ரத்னாயக்க 20/3, K. சர்மிளன் 32/3

கிழக்கு பல்கலைக்கழக அணி – 139 (35.4) – K. ரஞ்சீவ் 71, S. மகிந்த குமார் 35, MRR. சந்துன் விக்கிரமசிங்க 35/4, KGKW. விக்கிரமசிங்க 28/3

முடிவு – சப்ரகமுவ பல்கலைக்கழக அணி 18 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<