பிரபலம் பெற்ற ஸாஹிரா கல்லூரியை 2-3 என்று பெனால்டி முறையில் வென்றதன் மூலம், 12ஆவது முறையாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஒழுங்குசெய்த சூப்பர் 16 அணிக்கு 7 பேர் கொண்ட காற்பந்தாட்ட போட்டிகளில் வெஸ்லி கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது.
கப் இறுதிப் போட்டி
வெஸ்லி கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி மோதிக்கொண்ட இறுதிப்போட்டியில், முழு நேரம் மற்றும் மேலதிக நேரம் இரண்டிலும் இரு அணிகளும் எந்த ஒரு கோலையும் போடாத நிலையில் பெனால்டி உதைகளின் மூலம் வெற்றியாளரை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. பலம் மிக்க ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டை சிறப்பாகக் கட்டுப்படுத்திய வெஸ்லி பின் வரிசை வீரர்கள் கோல் எதுவும் அடிக்க விடாது பெனால்டி வரை போட்டியைக் கொண்டு சென்றனர். பெனால்டி உதைகளில் சம்பியன் வெஸ்லி கல்லூரி அணி 3 கோல்களையும் தவறவிடாது அடிக்க, ஸாஹிரா கல்லூரியால் 2 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
முழுப் போட்டியிலும் ஸாஹிரா அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. தமக்கு கிடைத்த பல வாய்ப்புகளை ஸாஹிரா அணி வீரர்களான சப்ரான், பாரூட் பாய்ஸ் மற்றும் மொகமட் ஆகியோரால் தவறவிடப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய வெஸ்லி அணியின் கோல் காப்பாளர் மொகமட் நிப்ராஸ் ஸாஹிரா அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை சிதறடித்தார்.
வெஸ்லி அணி வீரர் ஷஹீலிற்கு கோல் அடிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதுவும் தவறவிடப்பட்டது.
ஒழுங்கமைப்பாளர்களான ஸாஹிரா சென்ற முறையும் மாறிஸ்டெல்லா அணியுடன் தோல்வியுற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. வெஸ்லி அணி சூப்பர் 16 கிண்ணத்தை வரலாற்றில் முதன் முதலாக சுவீகரித்து.
வெஸ்லி அணியின் பயிற்சிவிப்பாளர் ஆசிப் அன்சார் நமக்கு கருத்து தெரிவித்தபோது,
“நமக்கு அனுப்பிவைக்கப்பட்ட விதிகள் பத்திரத்தில் மேலதிக நேரம் இருப்பதாக ஒழுங்கமைப்பாளர்கள் கூறினார்கள். அனால் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் அல்லது போட்டியின் இடைவேளையில் கூட இது பற்றி எந்த ஒரு தகவலையும் போட்டி நடுவரோ, மற்றவர்களோ நமக்கு கூறவில்லை. இதனால் எமது திட்டத்திற்கு இறுதி நேர மாற்றங்களைக் கொண்டு வர நேர்ந்தது. நாங்கள் வெற்றிபெற்றோம். அனால் இது போன்ற விடயங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
ஸாஹிரா கல்லூரியின் பயிற்சிவிப்பாளரான மொகமட் ரூமி “அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். இப்போட்டிகளில் வெற்றிபெற அதிஷ்டமும் வேண்டும். இன்று எமக்கு அதிஷ்டம் காணப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் மேலதிக நேரம் பற்றி கருத்து தெரிவித்தபோது “ஆம் நானும் நடுவர்களிடம் போட்டியின் இடைவேளையின் பொழுது இது பற்றி உரையாடினேன். முன்னர் போட்டியின் ஒரு பாதி, 10 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்ட பொழுதும் பின்னர் அது 7 நிமிடங்கள் எனவும், போட்டி சமநிலையில் முடியும் எனில் ஒரு பாதி, 3 நிமிடங்களைக் கொண்ட மேலதிக நேரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.”
வெஸ்லி கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரிகளுக்கிடையிலான கப் அரையிறுதி போட்டி
இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்காத நிலையில் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டது. வெஸ்லி கல்லூரி 3 கோல்களையும் அடிக்க கண்டி திரித்துவக் கல்லூரியினால் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே வெஸ்லி கல்லூரி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
குழு B இல் 2ஆம் இடத்தை பிடித்த வெஸ்லி கல்லூரியானது, புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்ததோடு கேகாலை புனித மேரிஸ் கல்லூரியுடன் வெற்றிபெற்றது. மேலும் 4ஆவது காலிறுதி போட்டியில் ரோயல் கல்லூரியையும் பெனால்டி மூலம் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தெரிவானது.
மறுபக்கம் யாரும் எதிர்பாராது சிறப்பாக விளையாடிய கண்டி திரித்துவக் கல்லூரி C குழுவில் 2ஆம் இடத்தை பிடித்தது. இவ் அணி கொழும்பு இந்து கல்லூரி, டி மசெனோட் கல்லூரிகளுடனான போட்டியை சமன் செய்ததோடு கொழும்பு ஸாஹிரா அணியுடன் தோல்வியுற்றது.
குழுவில் 2ஆம் இடத்தை தீர்மானிக்க திரித்துவக் கல்லூரி மற்றும் டி மசெனோட் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பெனால்டி உதையில் திரித்துவக் கல்லூரி வெற்றிபெற்று காலிறுதிக்குத் தெரிவானதோடு, காலிறுதியில் கம்பளை ஸாஹிரா கல்லூரியை பெனால்டி உதையில் 2-0 என்று வென்று அரையிறுதிக்குத் தெரிவானது.
ஸாஹிரா கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டிஸாஹிரா கல்லூரி 2-0 என்று வடமாகாண அணியான இந்து கல்லூரியை வென்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. சப்ரான் சத்தார் மூலமாக வெற்றி கோல்கள் இரண்டும் பெறப்பட்டது.
குழு C இல் வெற்றிபெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி, கொழும்பு இந்து கல்லூரி, டி மசெனோட் கல்லூரி, திரித்துவக் கல்லூரி ஆகிய அணிகளை வென்றது, காலிறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரியை 1-0 என வென்று அரையிறுதிக்குத் தெரிவானது.குழு B இல் வெற்றிபெற்ற மானிப்பாய் இந்து கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரி, புனித மேரிஸ் ஆகிய கல்லூரிகளை வென்றதோடு வெஸ்லி அணியுடனான போட்டியை சமநிலை செய்தது. காலிறுதியில் பதுளை அல் அதான் கல்லூரியை 4-0 என்று வென்று அரையிறுதிக்குத் தெரிவானது.
திரித்துவக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரிகளுக்கிடையிலான கப் 3ஆம் இடப் போட்டி
மானிப்பாய் இந்து கல்லூரி திரித்துவக் கல்லூரியை 2-0 என வென்று 3ஆம் இடத்தைப் பிடித்துக்கொண்டது.
ரோயல் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகளுக்கிடையிலான பிளேட் இறுதிப் போட்டி
சென்ற வருடம் இறுதிப் போட்டிக்கு தெரிவான ரோயல் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரியை 2-1 என்று பெனால்டி முறையின் மூலம் வென்று பிளேட் கிண்ணத்தை சுவீகரித்தது.
மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் இசிபதன அணிகளுக்கிடையிலான ஷீல்ட் இறுதிப் போட்டி
இசிபதன கல்லூரியை 1-0 என வென்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியானது ஷீல்ட் கிண்ணத்தை சுவீகரித்தது.
புனித பெனடிக்ஸ் மற்றும் புனித பீட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான பொவுல் இறுதிப் போட்டி
புனித பெனடிக்ஸ் கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரியை 3-1 என பெனால்டி முறையின் மூலம் வென்று பொவுல் கிண்ணத்தை வென்றது.