அவுஸ்திரேலியாவின் சிட்னியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு இலங்கையும் தகுதிபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்ட உத்தேச குழாமுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றபோது அப்பிரதேசத்திலிருந்து 12 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
இத் தேர்வுகள் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
யாழ். வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தேர்வின்போது கேதுஷா சர்வதன், ஜீவிதா பரமானந்தராஜா, சுபூசனா ஜெயராஜா (மூவரும் உடு வில் பிரதேச செயலகம்), அபித்தா தருமராஜா, கீர்த்திகா செல்வராசா, சாரங்கா ராஜரட்ணம் (மூவரும் தெல்லிப்பழை பி.செ.), சக்தி சிவராசா, கஜானனி கேதீஸ் வரன் (இருவரும் யாழ். பி.செ.), துஷ்யந்தி குணசீலன், திவ்வியா சண்முகநாதன் (இருவரும் நல்லூர் பி.செ.), யாமினி அருந்தவராஜா (சாவகச்சேரி பி. செ.), ஸ்ரீசக்தி சந்திரசோதி (சங்கானை பி. செ.) ஆகியோர் இரண்டாம் கட்டத் தேர்வில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளனர்.
வட மாகாணத்திற்கான தெரிவுகள் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் கண்காணிப்பில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் செயலாளரும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியுமாகிய ஜயந்தி சோமசேகரம் டி சில்வா, றோகினி பெரேரா, திசாங்கனி கொடித்துவக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்தனர்.
இதேவேளை, கண்டி, காலி, பொலன்னறுவை, பதுளை ஆகிய மாவட்டங்களில் நாளை 18 ஆம் திகதியும் கொழும்பு மாவட்டத்தில் 19ஆம் திகதியும் முதலாம் கட்டத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தெரிவுகள் ஏப்ரல் மாதம் 25, 26ஆம் திகதிகளில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்.
இதன் போது அதி சிறந்த வலைபந்தாட்ட ஆற்றல்மிக்க 30 முதல் 40 வீராங்கனைகள் உத்தேச வலைபந்தாட்டக் குழாமுக்கு தெரிவு செய்யப்படுவர்.
இவர்கள் சுமார் ஒருமாத காலம் உடற்றகுதி பயிற்சிகளுக்கு உட்படுத்தப் படுவதுடன் பயிற்சிப் போட்டிகளிலும் ஈடுபடுவர்.
அதன் பின்னர் இறுதி வீராங்க னைகள் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.