கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகள் இன்று மோதிக்கொண்ட 100ஆவது மலையகத்தின் நீல பெரும் சமரின் முதல் நாள் ஆட்டம் மழையின் இடையூறு காரணமாக குறைந்த ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நிறைவுற்றது.
போட்டி நிறுத்தப்படும் போது கண்டி திரித்துவக் கல்லூரி அணி 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் காணப்படுகின்றது.
[rev_slider dfcc728]
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2 நாட்களை கொண்ட இப்போட்டியில், திரித்துவக் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகள் 100ஆவது முறை சந்தித்துக்கொள்வது சிறப்பம்சமாகும்.
இதன் காரணமாக அமோகமாக ஒழுங்குகள் செய்யப்பட இப்போட்டி அனைவரது எதிர்பார்ப்பிற்கும், ரசிகர்களின் ஆரவாரத்திற்கும் மத்தியில் ஆரம்பித்தது. திரித்துவக் கல்லூரியை ஷனோகீத் ஷண்முகநாதனும், புனித அந்தோனியார் கல்லூரியை மொஹமட் அல்பரும் வழிநடாத்துகின்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி திரித்துவக் கல்லூரியானது முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதன்படி அக்கல்லூரியின் சார்பாக வெறும் 7 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஹசிந்த ஜயசூரிய, சதீஷின் பந்து வீச்சிற்கு சந்தருவனிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.
முதலாவது விக்கெட்டை குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் பறிகொடுத்த திரித்துவக் கல்லூரியை தலைவர் ஷானோகீத் மற்றும் உப தலைவர் போயகொட இணைந்து கட்டியெழுப்பினர்.
இருவரும் நிதானமாகவும், சிறப்பாகவும் துடுப்பெடுத்தாட திரித்துவக் கல்லூரி மதிய போசன இடைவேளையின் போது 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் காணப்பட்டது. இவ்வருடத்தில் 1000 ஓட்டங்களை ஏற்கனவே பெற்றுக்கொண்ட நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஷனோகீத், தனது பெயரில் மற்றுமொரு அரைச் சதத்தை பதிவுசெய்தார். அவரை தொடர்ந்து இலங்கை இளம் கிரிக்கெட் அணியின் சிறப்பு வீரரான ஹசித போயகொடவும் அரைச் சதத்தை பெற்றுக்கொண்டார்.
இருவரின் 100 ஓட்டங்களை கடந்த இணைப்பாட்டத்தையும் அந்தோனியார் கல்லூரியின் கலன உடைத்தார். கலனவின் பந்து வீச்சில், சதீஷிடம் பிடி கொடுத்து 83 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஷனோகீத் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அந்தோனியார் கல்லூரி, சன்னக பண்டாரவை ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் மைதானத்தை விட்டு வெளியேற்றியது. சிறப்பாக பந்து வீசிய அலவி, பண்டாரவை ஆட்டமிழக்க செய்தார்.
திரித்துவக் கல்லூரி 186 ஓட்டங்களை பெற்றிருந்த பொழுது மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் தேநீர் இடைவேளையின் பின்னர் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் திரித்துவக் கல்லூரி துடுப்பெடுத்தாட களத்தில் இறங்கியது.
திரித்துவக் கல்லூரி 201 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அணியை வழிநடாத்திய போயகொடவை அந்தோனியார் கல்லூரி ஆட்டமிழக்க செய்தது. சிறப்பாக பந்து வீசிய அலவியிடமே பிடி கொடுத்து போயகொட ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவின் பொழுது திரித்துவக் கல்லூரி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் காணப்படுகின்றது. போட்டியின் ஆரம்பத்தில் திரித்துவக் கல்லூரி தமது ஆதிக்கத்தை செலுத்தியது. எனினும் இறுதி சில மணித்தியாளங்களில் சிறப்பாக விளையாடிய அந்தோனியார் கல்லூரியானது 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தமது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.
மழையின் காரணமாக முதல் நாளில் 30 ஓவர்கள் குறைவாகவே வீசப்பட்டது. எனவே போட்டி சமநிலையில் முடிவடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி 204/4 – ஷனோகீத் 83, ஹசித போயகொட 90, அலவி 2விக்கெட்டுகள்