பொதுநலவாய விளையாட்டு விழா பளுதூக்கலில் 11 இலங்கை வீரர்கள்

427

மலரவிருக்கும் 2018ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச விளையாட்டு விழாவாக அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் அமையவுள்ளன. இவ்விளையாட்டு விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயிற்சிகளில் இலங்கை அணியும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டிகளுக்காக தகுதியை பெற்றுக்கொண்ட 11 பேர் கொண்ட இலங்கை பளுதூக்கல் குழாமை இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பளுதூக்கல் குழாமில் 7 வீரர்களும், 4 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களுள் 6 வீரர்கள் முதற்தடவையாக குறித்த விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை பளுதூக்கல் அணியின் அனுபவமிக்க வீரரும், பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்றவருமான சின்தன கீதால் விதானகே 5ஆவது தடவையாகவும் இவ்விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக 2002, 2006, 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் பங்கேற்ற அவர், 2006 மெல்பேர்னில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் 62 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற அவர், 2010இல் இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் 69 கிலே.கிராம் எடைப்பிரிவில் 308 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். எனினும், இறுதியாக 2014இல் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய பாடசாலைகள் நகர் வல ஓட்டத்தில் இலங்கைக்கு 2 சம்பியன் பட்டங்கள்

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப்…

இந்நிலையில், 2010 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப்பதக்கத்தையும், 2014 போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்ற மற்றுமொரு அனுபவமிக்க வீரரான எண்டன் சுதேஷ் பீரிஸ், பொதுநலவாய விளையாட்டு விழா அடைவு மட்டத்தை பூர்த்தி செய்யாத காரணத்தால் இம்முறை விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

இதேவேளை, முன்னதாக நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்த இந்திக சதுரங்க திஸாநாயக்க (2010, 2014), சானக மதுஷங்க பீடர்ஸ் (2010, 2014), திலங்க விராஜ் பலகசிங்க (2014), சமரி வர்ணகுலசூரிய (2014) உள்ளிட்ட வீரர்களும் இம்முறை விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டிக்கு தகுதிபெற்ற வீரர்கள் விபரம்:

ஜே. ஏ சதுரங்க லக்மால் (56 கிலோ எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (62 கிலோ எடைப்பிரிவு), இந்திக சதுரங்க திசாநாயக்க (69 கிலோ எடைப்பிரிவு), சின்தன கீதால் விதானகே (77 கிலோ எடைப்பிரிவு), சானக மதுஷங்க பீடர்ஸ் (94 கிலோ எடைப்பிரிவு), ஏ.ஜி சமன் அபேவிக்ரம (105 கிலோ எடைப்பிரிவு), டபிள்யு. பி.உஷான் சாருக (105 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவு), ஹங்சனி தோமஸ் (48 கிலோ எடைப்பிரிவு), சமரி வர்ணகுலசூரிய (53 கிலோ எடைப்பிரிவு), நதீஷானி ராஜபக்ஷ (58 கிலோ எடைப்பிரிவு), பி. சதுரிகா பிரியந்தி (75 கிலோ எடைப்பிரிவு)