ஜப்பானில் மற்றுமொரு மைல்கல்லை எட்டிய அருண தர்ஷன

290

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் இன்று (06) ஜப்பானில் நடைபெற்ற 10ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் (10th Kinami Michitaka Memorial Athletics Meet) பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் அருண தர்ஷன 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

ஒசாகாவில் உள்ள நகெய் (யென்மர்) விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, போட்டித் தூரத்தை 45.49 செக்கன்களில் நிறைவு செய்தார். அத்துடன், குறித்த போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் அவர் பதிவு செய்தார்.

மூன்று இறுதிப்போட்டிகளைக் கொண்ட இந்தப் போட்டியில், பதிவு செய்யப்பட்ட நேரங்களின்படி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, ஒட்டுமொத்த நிலையில் அருண தர்ஷனவுக்கு 2ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை ஜப்பானில் நடைபெற்ற (29) 38ஆவது ‘ஷிஸுஓக்கா’ சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட அருண தர்ஷன, 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.59 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆம் இடத்தைப் பெற்றார். ஆனால், 24 வீரர்கள் பங்குபற்றிய 3 இறுதிப் போட்டிகளுக்குமான ஒட்டுமொத்த நிலையில் அவர் 3ஆம் இடத்தையே பெற்றார்.

எவ்வாறாயினும், குறித்த போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியை பதிவுசெய்த அவர், 6 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இன்று நடைபெற்ற போட்டியில் வைத்து புதுப்பித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, குறித்த போட்டியில் ஜப்பான் வீரர் யுக்கி ஜோசப் நக்காஜிமா 45.39 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்நாயகவுக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது. போட்டித் தூரத்தை நிறைவு செய்ய 10 நிமிடங்கள் 02.90 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<