எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகும் 108வது பொன் அணிகளின் சமர்

108th Battle of the Golds 2025

18
108th Battle of the Golds 2025

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணிகள் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் சமர் இம்மாதம் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் புனித பத்திரிசிரியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதுவரை காலமாக இரண்டு நாட்கள் ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டியானது இம்முறை முதன்முறையாக மூன்று நாட்கள் கொண்ட போட்டியாக இடம்பெறவுள்ளது. 

>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து விலகிய ஆஸி. வீரர்<<

இது வரை நடைபெற்றிருக்கின்ற பொன் அணிகளின் சமரில், 35 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும், 16 போட்டிகளில் யாழ்ப்பாண கல்லூரி அணியும் வெற்றிபெற்றிருக்கின்ற நிலையில் 30 போட்டிகள் சமநிலையில் நிறைவு பெற்றிருக்கின்றன. ஒரு போட்டி கைவிடப்பட்டிருக்கின்றது 

புனித பத்திரிசியார் கல்லூரி அணி 2023 இல் இறுதியாக வெற்றியினை பதிவு செய்திருக்கின்றதுடன், யாழ்ப்பாண கல்லூரி அணி 1973 ஆம் ஆண்டில் இறுதியாக வெற்றியினை தம்வசப்படுத்தியிருக்கிறது. 

கடந்த வருடம் இடம்பெற்றிருந்த 107ஆவது சமர் சமநிலையில் நிறைவிற்கு வந்திருந்தது. அதற்கு முன்னைய இரு சமர்களிலும் புனித பத்திரிசியார் கல்லூரி ஆதிக்கம் செலுத்தியிருந்ததுடன் இலகு வெற்றியினையும் பதிவு செய்திருந்தது. ஆனாலும், கடந்த சமரில் யாழ்ப்பாண கல்லூரி முன்னிலை வகித்திருந்தது; இது இந்த வருட போட்டியின் மீது பலரது கவனத்தினை திருப்பியிருக்கின்றது 

புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இம்முறை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமையினால் பெரும் சமரும் அவர்களின் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாழ்ப்பாணக் கல்லூரி அணி 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் தொடரில் பிரிவு மூன்றின் – அடுக்கு B (டியர் B ) போட்டிகளில் யாழ்ப்பண கல்லூரி அணியினர் பங்கெடுத்து வருகின்றனர்.  

அனுபவமிக்க சகலதுறை வீரரான மதுசன் தலைமையில் களம் காணுகின்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணி கடந்த சமர்களில் சோபித்த பல அனுபவ வீரர்களை கொண்ட குழாமுடன் இம்முறை பெரும் சமரில் களம் காணுகின்றனர்.  

கடந்த சமரில் அரைசதம் கடந்திருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் றொய்ஸ் ஜோன்சன், விக்கெட் காப்பாளர் இமக்சன் ஆகியோர் நம்பிக்கை கொடுக்கும் துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர். 

 >>Photos – Jaffna College Big Match Team Preview 2025<<

சுழற்பந்து வீசுகின்ற சகலதுறை வீரர்கள் அணியின் உப தலைவர் டேமியன், கடந்த சமரில் 9 விக்கெட்டுக்களை வீழ்த்திய விஷ்ணுகோபன், கர்மிஷன், கபிஷன் மற்றும் இடது கை வேகப்பந்து வீசும் சகலதுறை வீரரான மதுசன் ஆகியோர் அணிக்காக இந்த பருவகாலத்தில் இரு துறைகளிலும் பங்களித்திருக்கின்ற வீரர்கள். வேகப்பந்து வீச்சாளர்களான புவிநஜன், கார்த்திகன் மற்றும் ரித்மன் ஆகியோரும் பெரும் சமரில் வட்டுக்கோடடை தரப்பிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.  

யாழ்ப்பாண கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளராக அணியினை 2010 ஆம் ஆண்டில் அணியினை  வழிநடத்தியிருந்த ஸ்ரீகுகன் செயற்படுகின்றார்.  

இம்முறை பெரும் சமரில் களமிறங்குகின்ற யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு கடந்த வருடம் அவர்கள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் கொடுத்த நம்பிக்கை, குழாமில் அநேகமான வீரர்கள் இந்த பெரும் சமரில் மூன்று வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தினை கொண்டிருக்கின்றமை அணிக்கு கூடுதல் பலம்.    

யாழ்பாணக் கல்லூரி குழாம் 

சிதம்பரலிங்கம் மதுசன் (அணித்தலைவர்), தர்மகுமரன் டேமியன் (உதவி அணித்தலைவர்), ராபின்சன் உதயகுமார் ஜோன்சன், இமயமலை மோகன் இமக்ஸ்ஷன், குகேந்திரன் புவிநஜன், திவாகரன் கார்த்திகன், வாசுதேவன் விஷ்ணுகோபன், அந்தோணி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹர்மிஷன் , கேதீஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் கர்மிஷன், சுரேஷ்  கபிஷன், சபேசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், சுரேந்திரன் பங்கஜன், சசிகரன் அஷ்மின், உதயராஜா கென்றெக்சன். S.அட்ஷயன், B.கெவின் 

  • பயிற்றுவிப்பாளர் –  பாக்கியநாதன் ஸ்ரீகுகன்  
  • பொறுப்பாசிரியர் – பிலிப்பைய்யா மாசிலாமணி மைக்கல் தேவதர்ஷன்  
  • உடற்கல்வி இயக்குனர் ராஜகோபால்  குகன் 

 >>கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமனம்!<<

புனித பத்திரிசியார் கல்லூரி அணி 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் தொடரில் பிரிவு  மூன்றின் – அடுக்கு A (டியர் A ) போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் பங்கெடுத்து வருகின்றனர்.  

கிண்ணத்தினை தம்வசம் தக்கவைத்துள்ள புனித பத்திரிசியார் கல்லூரி அணி இம்முறை அனுபவமிக்க சகலதுறை வீரரான பற்குணம் மதுசன் தலைமையில் பெரும் சமரில் பங்கெடுக்கின்றனர்.  

பத்திரிசியார் கல்லூரியின் வீரர்கள் குழாம் அனுபவ வீரர்கள் மற்றும் புதுமுக வீரர்களினை கொண்டதாக அமைந்திருக்கின்றது. வீரர்கள் குழாமினை பொறுத்தவரையில், துடுப்பாட்டத்தில் யாழ் மாவட்ட, வட மாகாண அணிகளில் ஆடிய றொபின்சன் சியந்தோஷன், இந்த பருவகாலத்தில் அணிக்காக சோபித்திருக்கின்ற றொபின்சன் பியெர்லி டெனோவன், குமணதாசன் சாருஷன், டேவிட் அபிலாஷ் மற்றும் 15 வயதிற்குட்படட மாவட்ட அணியில் ஆடியிருக்கின்ற இளம் துடுப்பாட்ட வீரர் ஹரின் அட்ரியன் ஆகியோர் முக்கிய வீரர்களாகவிருக்கின்றனர்.  

பந்து வீச்சினை அவதானிக்கையில், பெருமளவில் சுழற்பந்துவீச்சு  பத்திரிசியார் கல்லூரியின் பலமாகவிருக்கின்றது, கடந்த சமரில் 8 விக்கெட்டுகளை சாய்ந்திருந்த சுழற்பந்து வீச்சாளர் சாருசன் இந்த பருவக்காலத்திலும் அணிக்காக அதிக விக்கெட்டுகளை சாய்த்திருக்கின்றார்.  

>>Photos – St. Patrick’s College, Jaffna Big Match Team Preview 2025<<

மற்றோரு சுழற்பந்து வீச்சாளரான அபிலாஷ் பத்திரிசியார் கல்லூரியின் பலம். இவர்களிற்கு மேலதிகமாக, அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக அணித்தலைவர் மதுசன் மற்றும் லிக்சன் ஆகியோர் திகழ்கின்றனர்.  

சகலதுறை வீரர்களில், பந்துவீச்சாளர்களிலும் பெருமளவில் தங்கியிருக்கின்ற பத்திரிசியார் கல்லூரி அணி தம் வசமிருக்கின்ற கிண்ணத்தினை தக்க வைக்கும் முயற்சியில் களமிறங்குகின்றனர். 

புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளராக அமலாதாஸ் நிஷாந்தன் செயற்படுகின்றார். 

புனித பத்திரிசியார் கல்லூரி குழாம் 

பற்குணம் மதுசன் (அணித்தலைவர்), குமணதாசன் சருஷன், ராபின்சன் ஷியன்த்தோசன், டேவிட் அபிலாஷ், வின்சென்ட் விமலாதாஸ் பிரியங்கன், பிரேமநாயகம் மதுஷன், றொபின்சன் பியெர்லி டெனோவன், சிவானந்தன் ஷெஹான், விஜயகுமார் ஏவோன், கம்மெடன் லிக் ஷன், விமலாதாஸ் டிபானோ, மதியழகன் ஸ்டீப் ஆதித்யா, நிஷாந்தன் ஹரின் அட்ரியன், செல்வகுமார் ஸ்மித் ஸிநாறி, ஜெயராஜ்ரூபன் டினுலக்சன், பகீதரன் சிபிஷாந்த், சுரேஷ்குமார் ஜானுஷன், பிரதீப் மெலோடியஸ் ரவின், ஜோஜேஷ்  

  • பயிற்றுவிப்பாளர்/ விளையாட்டுப் பொறுப்பாசிரியர் – அமலாதாஸ் நிஷாந்தன்  
  • பயிற்றுவிப்பு ஆலோசகர் – s . சஹாயராஜா 
  • பொறுப்பாசிரியர் – G ரஞ்சித்தேவராஜன் 

 >>ஆஸி. அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கும் மேற்கிந்திய தீவுகள்<<

இறுதியாக 

நூற்றாண்டு கடந்த இந்த பெரும் சமர் இம்முறை மூன்று நாள் கொண்ட போட்டியாக முதல் முறையாக இடம்பெறுவதனால், கடந்த சமர் போன்று  போட்டி சமநிலையில் நிறைவடைவதற்கான சந்தர்ப்பம் அரிது.  

இரு அணிகளும் பெருமளவில் தமது சுழற்பந்து வீச்சாளர்களில் தங்கியிருக்கின்ற நிலையில், பெரும் சமரில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், நிதானமான துடுப்பாடத்தினை வெளிப்படுத்துகின்ற அணிக்கு 108 ஆவது பொன் அணிகளின் சமரில் வெற்றி கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.   

 >>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<