106ஆவது பொன் அணிகளின் போர் இம்முறை யாழ்ப்பாண கல்லூரியில்

March Madness

255

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இவ்வருடம் 106 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டிக்கான ஊடக சந்திப்பானது புதன்கிழமை (22) யாழ்ப்பாண கல்லூரியில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் ருஷிரா குணசிங்கம், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் வண. திருமகன், இரு கல்லூரிகளினதும் உப அதிபர்கள், அனுசரணையாளர்கள், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் அணி வீரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மொபிடெல் நிறுவனத்தினர் பொன் அணிகளின் போரிற்கு அனுசரணை வழங்குகின்றனர்.

யாழ்ப்பாண கல்லூரி அதிபர் திருமதி ருஷிரா குணசிங்கம் அவர்கள் இரு கல்லூரிகளிடையேயும் தொடரும் நூறாண்டு கடந்த இந்த நடப்புறவு போட்டி தொடர் குறித்து தனது மகிழ்வினை தெரிவித்ததுடன், யாழ்ப்பாண கல்லூரி இருநூறாண்டு கடந்திருக்கின்ற இந்த சிறப்புமிக்க வருடத்தில் அங்கு இந்த போட்டிகள் நடத்தப்படுவது குறித்த தனது மகிழ்வினை தெரிவித்தார்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் வண. திருமகன் அவர்கள், இம்மூன்று போட்டிகளிற்கும் பழைய மாணவர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என சகலரும் நேரடியாக வருகை தந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் இரு அணிகளும் சிறந்த போட்டியினை வழங்குவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இம்முறை யாழ்ப்பாண கல்லூரியானது நிறுவப்பட்டு 200 ஆவது ஆண்டினை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற வேளையில், இம்முறை போட்டியானது இம்மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் அதே கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

இரண்டு நாள் போட்டியைத் தொடர்ந்து ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்திற்கான 30ஆவது ஒரு நாள் போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதியும், வண. பிரான்சிஸ் ஜோசப் சவால் கிண்ணத்திற்கான T20 போட்டி மார்ச் மாதம் 7ஆம் திகதியும் யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகளுக்கிடையில் 1917ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி, போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்தது.

கடந்த வருடம் இடம்பெற்ற 105ஆவது போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில், புனித பத்திரிசியார் கல்லூரி 34  தடவைகளும், யாழ்ப்பாண கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<