வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகிய 106வது பொன் அணிகளின் சமரில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியானது துடுப்பாட்ட வீரர்களின் பிரகாசிப்புடன் பலமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் மோதும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹெரி புரூக் படைத்த புதிய சாதனை!
அதன்படி களமிறங்கிய நடப்பு சம்பியனான புனித பத்திரிசியார் கல்லூரிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இளையராஜா ஜெஸ்ரிகன் மற்றும் மயூரன் சௌத்ஜன் ஆகியோர் அரைச்சத ஆரம்ப இணைப்பாட்டமொன்றை பெற்றனர்.
இதில் ஜெஸ்ரிகன் 44 ஓட்டங்களையும், சௌத்ஜன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த போதும், மத்தியவரிசையில் டேவிட் அபிலாஷ் மற்றும் பின்வரிசையில் சிவனேசசிங்கம் சமிந்தன் ஆகியோர் அரைச்சதங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுக்கொடுத்தனர்.
அபிலாஷ் 55 ஓட்டங்களையும், சமிந்தன் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இவர்களுக்கு உதவியாக ரொபின்சன் சியான்சன் 31 ஓட்டங்களையும், பத்குனம் மதுசன் 26 ஓட்டங்களையும் பெற்றுத்தந்தனர்.
இவ்வாறு துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 74.4 ஓவர்கள் நிறைவில் புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. பந்துவீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரிக்காக சிதம்பரலிங்கம் நர்த்தனன், திரவியநாயகம் ரொய்ஸ் ஜென்சன் மற்றும் பாபு பிருந்தன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
குறிப்பாக, யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்கள் களத்தடுப்பில் பல பிடியெடுப்புக்களை தவறவிட்டமை பத்திரிசியார் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக ஓட்டங்களைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்துக்காக களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இன்றைய ஆட்டநேர நிறைவில் 23 ஓவர்கள் துடுப்பெடுத்தாடியுள்ள யாழ்ப்பாணக் கல்லூரி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் அந்தோனி ரித்மான் அபிநாத் 13 ஓட்டங்களையும், சிதம்பரலிங்கம் மதுசன் 9 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் சிவராசா கீர்தன் மற்றும் அருள்தாசன் அபிசேக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
எனவே, முதல்நாள் ஆட்டநேர நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரியை விட, 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி முன்னிலை வகிக்கின்றது.
சுருக்கம்
புனித பத்திரிசியார் கல்லூரி – 272/9d (74.4), அபிலாஷ் 55, சமிந்தன் 50, பாபு பிருந்தன் 38/2, ரொய்ஸ் ஜென்சன் 56/2, நர்த்தனன் 70/2
யாழ்ப்பாணக் கல்லூரி -33/2 (23), அபிநாத் 13*, மதுசன் 9*, கீர்தன் 04/1, அபிசேக் 10/1
முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 239 ஓட்டங்களால் முன்னிலை
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<