இந்தியா மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த வீரர்களின் பங்குபற்றலுடன் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக 400 மீட்டர் வீரர் காலிங்க குமாரகேவும், அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 800 மீட்டர் வீராங்கனையான கயன்திகா அபேரத்னவும் தெரிவாகினர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஒரு இலங்கை சாதனையுடன் 4 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், ஆண்களுக்கன 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.07 செக்கன்களில் நிறைவு செய்த காலிங்க குமாரகே புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கம் வென்றார். 2000ஆம் ஆண்டு ரொஹான் பிரதீப் குமாவினால் நிலைநாட்டிய (45.25 செக்.) சாதனையை 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.
அத்துடன், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியை பதிவுசெய்த அவர், 46 செக்கன்களுக்குள் 400 மீட்டர் ஓட்டப் போட்டியை நிறைவுசெய்த 5ஆவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார்.
இதன்காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக காலிங்க குமாரகே தெரிவாகினார்.
- 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் அடுத்த வாரம் கொழும்பில்
- கோலூன்றிப் பாய்தலில் வெண்கலம் வென்றார் புவிதரன்
இதனிடையே, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.45 செக்கன்களில் நிறைவுசெய்த அருண தர்ஷனவும் தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்தார். எவ்வாறாயினும், முதல் தடவையாக காலிங்கவிடம் அவர் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கயன்திகா அபேரத்ன, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக தெரிவாகினார்.
இவர் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் (4 நிமிடங்கள் 16.83 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முடிவில், எதிர்வரும் ஆசிய விளையாட்டு விழா மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஆகிய 2 தொடர்களுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்ட அடைவு மட்டங்களை எந்தவொரு வீரர்களாலும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேக வீரர்கள்
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சமோத் யோதசிங்க தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 10.40 செக்கன்களை எடுத்தார்.
அதேநேரம், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 11.89 செக்கன்களில் நிறைவுசெய்த கேகாலை மாவட்ட மெய்வல்லுனர் சங்க வீராங்கனை ருமேஷிகா ரத்நாயக்க தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனிதுவின் இலங்கை சாதனை
ஆண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 13.72 செக்கன்களில் நிறைவுசெய்து ஜனிது லக்விஜய புதிய இலங்கை சாதனை படைத்தார். இம்முறை போட்டித் தொடரில் முறியடிக்கப்பட்ட ஒரேயொரு இலங்கை சாதனையாக இது இடம்பிடித்தது.
முன்னதாக நடைபெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டியை 13.77 செக்கன்களில் நிறைவுசெய்த அவர் தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்திருந்தார். எனவே, 24 மணித்தியாலங்கள் செல்வதற்குள் இலங்கை சாதனையை அவர் 2 தடவைகள் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 2021இல் இராணுவ வீரர் ரொஷான் ரணதுங்க 13.89 செக்கன்களில் ஓடிமுடித்து பதிவுசெய்த போட்டி சாதனையையே அவர் புதுப்பித்தார்.
இந்திய வீரர்கள் அபாரம்
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த 27 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் 7 தங்கம் 3 வெள்ளிப் பதக்கங்களை அந்த அணி வீரர்கள் சுவீகரித்துக் கொண்டனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 84.38 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த கிஷோர் குமார் ஜெனா புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான ஷிவபால் சிங் (77.36 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
அதேபோல, ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்டம் மற்றும் 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம் ஆகிய 3 குழுநிலை போட்டிகளிலும் இந்திய அணிகள் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டன.
அத்துடன், பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் சீமா (35:39.22), ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் குமார் தமிழரசன் (50.37 செக்.) மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் சோனியா பைசியா (53.46 செக்.) ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரிக்க, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சிவ சுபரமணி (4.90 மீட்டர்), பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜிஸ்னா மெதிவ் (53.75 செக்.) ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<