101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளான நேற்று (28) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர் அருந்தவராசா புவிதரன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கையின் நடப்புச் சம்பியன் சச்சின் எரங்க ஜனித், முன்னாள் சம்பியன் இஷார சந்தருவன் மற்றும் கோலூன்றிப் பாய்தலில் இந்தியாவின் நடப்புச் சம்பியன் சிவ சுபர்மணி ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.
எனினும், இலங்கை வீரர் இஷார சந்தருவன் மற்றும் இந்திய வீரர் சிவ சுபர்மணி மற்றும் யாழ். வீரர் புவிதரன் ஆகிய மூவரும் முறையே 4.90 மீட்டர் உயரத்தைத் தாவி முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன், தற்போது இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணிக்காக விளையாடி வருவதுடன், இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 58ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 5.00 மீட்டர் உயரம் தாவி இரண்டாவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், போட்டித் தொடரின் முதல் நாளான நேற்றைய தினம் 10 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிலில் இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா தங்கப் பதக்கம் வென்றார். 84.38 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர் புதிய போட்டிச் சாதனையையும் நிலைநாட்டினார்.
முன்னதாக 2015ஆம் ஆண்டு 83.04 மீட்டர் தூரம் எறிந்து சுமேத ரணசிங்க நிலைநாட்டிய போட்டிச் சாதனையை 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
- புவிதரனின் இலங்கை சாதனையை முறிடித்தார் ஜனித்
- ஆசிய மெய்வல்லுனரில் புது சரித்திரம் படைத்த இலங்கை
- 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் அடுத்த வாரம் கொழும்பில்
இந்த நிலையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மற்றுமொரு இந்திய வீரரா ஷிவபால் சிங் (77.36 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் சுமேத ரணசிங்க (73.40 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஆண்களுக்கான 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியை 45.98 செக்கன்களில் நிறைவுசெய்து ரஜித ராஜகருணா, குறித்த போட்டியை 46 செக்கன்களுக்குள் ஓடி முடித்த 6ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், இன்று நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னணி வீர்ர்களான அருண தர்ஷன, காலிங்க குமாரகே மற்றும் பபசர நிகு உள்ளிட்ட வீரர்கள் ரஜித ராஜகருணாவிற்கு பலத்த போட்டியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர, பெண்களுக்கான உயரம் பாய்தலில் முன்னாள் தேசிய சம்பியனான 34 வயதுடைய எஸ்.எம் சூரியம்பல, 1.65 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இறுதியாக அவர் கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய மெய்வலுனர் சம்பியன்ஷிப் பெண்களுக்கான உயரம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய ஒவினி சந்திரசேகர 13.43 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கம் வென்றார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் தேசிய சம்பியனான அவரது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியாகவும் பதிவாகியது.
101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரினட 2ஆவது நாள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<