100 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்கவும், அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 3000 மீட்டர் தடைதாண்டல் வீராங்கனையான நிலானி ரத்னாயக்கவும் தெரிவாகினர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக 100 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இந்தப் போட்டித் தொடரின் முதலிரண்டு நாட்களுக்கான அனைத்து போட்டிகளும் வெற்றிகரமாக நடைபெற்றது. எனினும், போட்டியின் கடைசி நாள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட குறித்த தினத்தில் நடைபெறவிருந்த 12 போட்டி நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டியை இன்று (23) நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, 100 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் எஞ்சிய போட்டிகள் மற்றும் போட்டித் தொடரின் இறுதி பரிசளிப்பு வைபவம் என்பன இன்று (23) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
- 5 ஆயிரம் மீட்டரில் தேசிய சம்பியனாக மகுடம் சூடினார் வக்ஷான்
- இலங்கை சாதனையை முறியடித்த சச்சினி, நிலானி, கயந்திகா
- இலங்கையின் இரும்பு மனிதராக மகுடம் சூடிய மொஹமட் அஸான்
இதில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட சுமேத ரணசிங்க, 82.18 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும் அவர் தெரிவாகினார்.
இதனிடையே, பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிலானி ரத்னாயக்க, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக தெரிவாகினார்.
இதேவளை, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் எச். குமார (3 நிமி.48.34 செக்.), ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சமல் குமாரசிறி (16.40 மீட்டர் – புதிய போட்டிச் சாதனை), ஆண்களுக்கான உயரம் பாய்தலில் குமார (2.15 மீட்டர்), பெண்களுக்கான உயரம் பாய்தலில் பெர்னாண்டோ (1.68 மீட்டர்), பெண்களுக்கான குண்டு எறிதலில் தாரிகா பெர்னாண்டோ (13.28 மீட்டர்), பெண்களுக்கான முப்பாய்ச்சலில் எச். குரே (12.89 மீட்டர்), பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீகா லேகம்கே (55.03 மீட்டர்) தங்கப் பதக்கங்களை வென்றனர்.
அதேபோல, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷனவும், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்னவும் தங்கப் பதக்கங்களை சுவீகரிக்க, ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சமோத் யோதசிங்கவும், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் அமாஷா டி சில்வாவும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
இதேநேரம், 100 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் மூன்று இலங்கை சாதனைகளும், இரண்டு போட்டிச் சாதனைகளும், இரண்டு கனிஷ்ட தேசிய சாதனைகளும் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<