தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது நாளான இன்று (09) மூன்று இலங்கை சாதனைகளும், ஒரு போட்டிச் சாதனையும், இரண்டு கனிஷ்ட தேசிய சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
இந்த அனைத்து சாதனைகளும் பெண்களால் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பெண்களுக்கான மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம்வருகின்ற கயந்திகா அபேரட்ன, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 02 நிமிடங்களும் 01.44 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தினை அவர் பூர்த்தி செய்தார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்தார்.
பெண்களுக்கான 1500 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை சாதனைகளை முறியடித்தவராக கயந்திகா அபேரட்ன வலம்வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
குறித்த போட்டியில் பங்குகொண்ட கனிஷ்ட வீராங்கனையான தருஷி கருணாரத்ன, போட்டியை 02 நிமிடங்கள் 04.40 செக்கன்களில் நிறைவுசெய்து டில்ஷி குமாரசிங்கவின் கனிஷ்ட தேசிய சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனிடையே, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்னாயக்க, இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
போட்டியை 9 நிமிடங்கள் 40.24 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்தார். அத்துடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தினையும் அவர் பூர்த்தி செய்தார்.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.71 மீட்டர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை 6ஆவது முறையாக சச்சினி பெரேரா முறியடித்தார்.
முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் 3.65 மீட்டர் உயரத்தையும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 3.70 மீட்டர் உயரத்தையும் தாவி அவர் அடுத்தடுத்து இலங்கை சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, பெண்களுக்கான நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான சாரங்கி சில்வா, 6.52 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற அமேஷா ஹெட்டியாரச்சி, தன்னுடைய சொந்த கனிஷ்ட தேசிய சாதனையை புதுப்பித்தார். போட்டியை அவர் ஒரு நிமிடமும் 00.22 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
இது தவிர, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது நாளான இன்று 15 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் யு.பி ஹேரத், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபான், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ருசிரு சதுரங்க, ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தனுக தர்ஷன மற்றும் ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் ரொஷாளன் தம்மிக, ஆண்களுக்கான தட்டெறிதலில் டி. சப்பரமாது மற்றும் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பிரசாத் விமலசிறி ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
>>5 ஆயிரம் மீட்டரில் தேசிய சம்பியனாக மகுடம் சூடினார் வக்ஷான்
பெண்களுக்கான 200 மீட்டரில் மேதானி ஜயமான்ன, பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கௌஷல்யா மதுஷானி, பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா, பெண்களுக்கான தட்டெறிதலில் பி. பெரேரா மற்றும் பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் லக்ஷிகா சுகந்தி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
நாளை (10) போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<