நாளுக்கு நாள் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை நெருங்கி வருகின்ற சூழ்நிலையில், யார் கிண்ணத்தைக் கைப்பற்ற போகின்றார்கள், யார் சிறந்த வீரர் போன்ற பல சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்ற இந்த நிலையில், ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி வரலாற்றில் நடந்துள்ள சில சுவாரஷ்யமான தகவல்கள் பற்றி பார்ப்போம்.
இம்முறை பங்குபற்றவுள்ள எட்டு நாடுகளும், 2015ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அன்று, ஐ.சி.சி தரப்படுத்தலுக்கு அமைவாக தகுதி பெற்றுள்ளன. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று நடப்பு சம்பியனாக இம்முறை களமிறங்கவுள்ளது.
>> கப்டில், வில்லியம்சன் ஆகியோரின் சிறப்பாட்டத்துடன் இலங்கைக்கு அதிர்ச்சியளித்த நியூசிலாந்து
அந்த வகையில், உலகிலுள்ள சிறந்த எட்டு கிரிக்கெட் விளையாடும் நாடுகள் கிண்ணத்தை வெற்றிகொள்ள ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் உலக தொடர்களில், இரண்டாவது மாபெரும் 50 ஓவர்கள் போட்டியாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் உள்ளது. மேலும், இந்த மினி உலக கிண்ணப் போட்டியானது குறித்த நாடுகள் வெற்றியீட்டி தமது அணிகளின் பலத்தை நிரூபிக்கும் களமாக கணிக்கப்படுகின்றது.
அந்தவகையில், கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அணிகள் எவ்வாறான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளன என்று பார்ப்போம்.
1. அதிகமுறை கிண்ணத்தை கைப்பற்றிய அணிகள்
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இரண்டு முறைகள் கிண்ணத்தை சுவீகரித்து தமது பலத்தை நிரூபித்த அணிகளாக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணியும் 2002 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை வெற்றியீட்டி இந்திய அணியும் தமது பலத்தை நிரூபித்தன.
2. அதிகமுறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணி
கிண்ணத்தை வெற்றியீட்டாமல் அதிகளவான இறுதிப் போட்டிகளில், பங்குபற்றிய அணியாக இங்கிலாந்து அணி உள்ளது. 2004 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவ்வணிக்கு கிண்ணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
3. சம்பியன்ஸ் கிண்ணத்தை மட்டும் கைப்பற்றிய அணி
வலிமை மிக்க அணியான தென்னாபிரிக்க அணி, உலக கிண்ண போட்டிகளின் போது பல தடவைகள் முக்கிய தருணங்களில் கோட்டை விட்டு தொடரிலிருந்து வெளியேறுவது வழக்கமானது. எனினும், முதல் தடவையாக பங்களாதேஷில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் கிண்ணத்தை கைப்பற்றியது. இதுவே, தென்னாபிரிக்கா அணி சர்வதேச சம்பியன்ஷிப் மட்டத்தில் கைப்பற்றியுள்ள ஒரேயொரு கிண்ணமாகும்.
4. 1998ஆம் ஆண்டு முதன் முதலாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றது.
5. 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு இலங்கை மற்றும் இந்திய அணிகள் கூட்டு சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
6. பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற முதலாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி நொக் அவுட் போட்டியாகவே நடைபெற்றது. அதாவது ஒரு அணிக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
7. மொத்தமாக 13 அணிகள் இதுவரை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு தடவையாவது தகுதி பெற்று போட்டியிட்டுள்ளன. அந்தவகையில், ஏழு அணிகள் எல்லா இறுதி போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ள அதேநேரம் அதில் 6 அணிகள் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
8. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வலிமை மிக்க அணியான மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
9. 1998ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக 2009ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டு தென்னாபிரிக்க நாட்டில் நடைபெற்றது. அன்றிலிருந்து உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளைப் போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.
10. 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக பங்களாதேஷ் அணி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுகின்றது.
11 டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து இதுவரை கிண்ணத்தைக் கைப்பற்றாத அணிகளாக இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
முன்னர் ஐ.சி.சி நொக் அவுட் போட்டிகள் என்று பெயரிடப்பட்ட இந்த போட்டித் தொடர் 2002ஆம் ஆண்டு தொடக்கம் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் என பெயர் மாற்றம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.