LLC T20 தொடரில் இணைந்துள்ள 9 இலங்கை வீரர்கள்

Legends League Cricket 2024

4

இந்தியாவில் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் 9 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களுக்காக நடைபெறுகின்ற லெஜண்ட்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது அத்தியாயம் இந்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. 6 அணிகள் பங்குபற்றவுள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஒக்டோபர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டித் தொடரின்  லீக் போட்டிகள் அனைத்தும் ஜோத்பூரில் உள்ள பர்கத்துல்லா கான் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி விளையாட்டரங்கில் நடைபெறும். 

ஓய்வுபெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு மீண்டும் களத்திற்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கும் இந்தத் தொடரில், கிறஸ் கெய்ல், லியெம் பிளான்கெட், ரோஸ் டெய்லர், இர்பான் பதான், அம்பத்தி ராயுடு போன்க நட்சத்திரங்களுடன் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்தியாவின் ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களும் களமிறங்கவுள்ளனர். 

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான லெஜண்ட்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) புது டில்லியில் நடைபெற்றதுடன், இம்முறை ஏலத்தில் 97 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

இதன்படி, இம்முறை ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் இசுரு உதான மாறினார்.அவரை 62 இலட்சத்திற்கு (இந்திய பணப்பெறுமதி) அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. அதேபோல, அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரராக தவால் குல்கர்னி இடம்பிடித்தார். அவரை 50 இலட்சத்திற்கு இந்தியா கெபிடல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது 

இதனிடையே, இசுரு தானவைத் தவிர மேலும் 8 இலங்கை வீரர்கள் இம்முறை லெஜண்ட்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் வைத்து வாங்கப்பட்டனர். இதில் இசுரு உதானவை ஒப்பந்தம் செய்த அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப்பை 49 இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.   

இதனிடையே, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரரான சீக்குகே பிரசன்னவை குஜராத் ஜயண்ட்ஸ் அணி 22.78 இலட்சம் ரூபாய்க்கும், டில்ஷான் முனவீரவை ஒடிசா கொனார்க் சூர்யாஸ் அணி 15.5 இலட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.      

அத்துடன், மனிபால் டைகர்ஸ் அணி இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான அஞ்சலோ பெரேராவையும் (41 இலட்சம் ரூபா), அசேல குணரட்னவையும் (36 இலட்சம் ரூபா) ஒப்பந்தம் செய்தது.   

இதேவேளை, சதர்ன் சுப்பர்ஸ்டார்ஸ் அணி, ஜீவன் மெண்டிஸ் (15.60 இலட்சம் ரூபா), சுரங்க லக்மால் (34 இலட்சம் ரூபா) மற்றும் சதுரங்க டி சில்வா (29 இலட்சம் ரூபா) ஆகிய மூவரையுத் தமது அணிக்காக ஒப்பந்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது 

இது இவ்வாறிருக்க, கடந்த ஆண்டு நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஒருசில் முன்னாள் இலங்கை வீரர்களை இம்முறை ஏலத்தில் எந்தவொரு அணியும் வாங்கவில்லை. திலகரட்ன டில்ஷான், உபுல் தரங்க, திலான் துஷார, அஷான் ப்ரியன்ஞன், லஹிரு திரிமான்ன, சாமர கபுகெதர, டில்ஹார பெர்னான்டோ, சாமர சில்வா ரங்கன் ஹேரத், தம்மிக் பிரசாத், சச்சித் பத்திரன, டில்ருவன் பெரேரா, மஹேல உடவத்த, சின்தக ஜயசிங்க, கித்துருவன் வித்தானகே, கிஹான் ரூபசிங்க மற்றும் அமில அபோன்சோ ஆகிய வீரர்கள் இம்முறை ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை.   

எவ்வாறாயினும், இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான திசர பெரேராவை மனிபால் டைகர்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<