உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு மேலும் 3 இலங்கை வீரர்கள் தகுதி

World Athletics Championship 2023

263
World Athletics Championship 2023

ஹங்கேரியில் இம்மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 வீரர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, கயந்திகா அபேரத்ன (பெண்களுக்கான 1500 மீட்டர்), நதீஷா தில்ஹானி லேகம்கே (பெண்களுக்கான ஈட்டி எறிதல்) மற்றும் அருண தர்ஷன (ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம்) ஆகிய மூவரும் இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர்.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவ மட்டத்தைப் பூர்த்தி செய்து தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருந்த வீரர்கள் பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகியதால், இந்த மூவருக்கும் அவர்களின் போட்டி நிகழ்ச்சிகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கையின் முன்னணி மத்திய தூர ஓட்ட வீராங்கனையான கயந்திகா அபேரத்ன 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் 56ஆவது இடத்தைப் பெற்று உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான வாய்ப்பை உறுதி செய்தார். 2ஆவது தடவையாக உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்ற அவர், ஸ்ரீயானி குலவன்ச மற்றும் சுசந்திகா ஜயசிங்க ஆகியோருக்குப் பிறகு 2 தடவைகள் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனையாக இடம்பிடித்தார்.

எவ்வாறாயினும், கயந்திகா அபேரத்ன உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரும் அவரது பயிற்றுவிப்பாளர் சஜித் ஜெயலாலும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொணடு பயிற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சம்பியனான நதீஷா லேகம்கே உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் முன்னாள் ஈட்டி எறிதல் சம்பியனான நதீகா லக்மாலிக்குப் பிறகு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டிக்காக தகுதி பெற்ற முதல் இலங்கை வீராங்கனையாகவும் இடம்பிடித்தார்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அருண தர்ஷன, உலக தரவரிசையில் 48ஆவது இடத்தைப் பிடித்து இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார், இதன்மூலம் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வீரர் ஒருவர் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

எவ்வாறாயினும், உலக தரவரிசையில் 12ஆவது இடத்தைப் பிடித்த 4×400 மீட்டர் இலங்கை அஞ்சலோட்ட அணி ஏற்கனவே இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டிககு தகுதி பெற்றிருந்தார். எனினும், காயம் காரணமாக, அவர் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 பேர் கொண்ட அணி பங்கேற்கவுள்ளதுடன், உலக சம்பியன்ஷிப்பில் தொடர் வரலாற்றில் இலங்கை சார்பில் பங்குபற்றவுள்ள 2ஆவது பெரிய அணி இதுவாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<